சென்னை: அதிமுக விவகாரத்தில் நான் சொல்றததான் கேக்கணும்; நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என சபாநாயகர் அப்பாவுக்கு ஓபிஎஸ் மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.
அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றமும், முறையான முடிவுகளை அறிவிக்காமல், குழப்பமான தீர்ப்புகளையே வழங்கி வருகிறது. இதனால், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இரு தரப்பினருக்கும் இடம் ஒதுக்குவது மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்து, அதிமுகவின் சட்டமன்ற தலைவரான எடப்படி பழனிச்சாமி ஒருபுறமும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் மற்றொரு புறமும், தாங்கள் சொல்வதைத்தான் சபாநாயகர் ஏற்க வேண்டும் என கூறி கடிதங்களை எழுதி வருகின்றனர்.
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப் பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.