சென்னை: அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் குற்றச்சாட்டினார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சராய சாவு குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் அதிமுக இன்றும் அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில், அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின்  குற்றச்சாட்டினார்.

தமிழக சட்டப் பேரவை கூட்டம் மானிய கோரிக்கை விவாதங்களுக்காக  கடந்த 20ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு துறைகள் சார்ந்து, மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தில் 60க்கும் மேற்பட்ட  உயிரிழப்புகள் நிகழ்ந்ததை கண்டித்து பிரதான எதிர்க்கட்சியான அதிமுக  அவையில் விவாதம் நடத்த  இந்த கூட்டத் தொடர் துவங்கியது முதலே கூறி வருகிறது.  ஒவ்வொரு நாளும் அவையில் , கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரி வருகிறது. அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்து வருகிறார். இதனால்,  தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், அதிமுக எம்எல்ஏக்களை சபாநாயகர்  அவையில் இருந்து வெளியேற்றி வருகிறதுமு. இன்று மூன்றாவது நாளாக,  சட்டப் பேரவை கூட்டத் தொடர் துவங்கியதுமே அதிமுகவினர் கள்ளச்சாராய விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் அப்பாவு, இந்த கூட்டத் தொடர் முழுவதும் அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,  “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் குறிப்பாக அதிமுகவினர் எழுப்ப விரும்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க இந்த அரசு தயாராக உள்ளது என்று கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே தெளிவாக இந்த அவையில் தெரிவித்து வருகிறேன். ஆனால் அதை ஏற்காமல் எதிர்க்கட்சித் தலைவர் வெளியில் சென்று பேசுவது இந்தப் பேரவையின் மரபுக்கும், மாண்புக்கும் ஏற்புடையதல்ல. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளது. ஆனால் இந்த துயர சம்பவம் குறித்து உண்மையான அக்கறையுடன் இந்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதான் நமக்கும் அவர்களுக்குமான வேறுபாடு”

இவ்வாறு   பேசினார்.