டில்லி,
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்துள்ள நிலையில், அதிமுக மத்திய அரசின் பங்கு வகிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக எம்.பி.க்கு மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சரவையில் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ள தாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் கோவா மாநில முதல்வராக பதவி ஏற்றார். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு துணைஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். மேலும் ஒரு அமைச்சர் மரணத்தை தழுவியுள்ள நிலையில், மத்திய அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவையில் பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு பதவி வழங்க ஏதுவாக, குஜராத் ராஜ்யசபா தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யாக பதவி ஏற்றுள்ளார்.
மேலும், தமிழகத்தில் உள்ள அதிமுகவின் அனைத்து அணிகளும் மத்தியஅரசுக்கு நிபந்தனை யற்ற ஆதரவு அளித்து வருகிறது. மேலும் பீகாரில் நிதிஷ்குமாரும், கூட்டணியில் இருந்து விலகி, பாரதியஜனதாவுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.
இந்த இரு கட்சிகளும் பாரதியஜனதா தலைமையிலான கூட்டணியில் விரைவில் இணையும் என்றும், அதைத்தொடர்ந்து அந்த கட்சியை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பதவிகள் வழங்கப்படும் என்றும் பா.ஜ. மேலிட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு ஏதுவாகத்தான் அமித்ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதாகவும், அதேபோல், அணிகள் இணைய பாரதியஜனதாவின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்பட்டு, அதிமுகவின் இரு அணிகளுக்கிடையே இணைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அதிமுக எம்.பி.யான மைத்ரேயனுக்கு மத்திய அமைச்சரவை யில் பதவி வழங்க இருப்பதாகவும் தவல்கள் கசிந்துள்ளன.
தற்போது மூத்த அமைச்சர்கள் சிலர் கூடுதலாக சில துறைகளை கவனித்து வருவதால், அவர்களின் வேலை பளு கூடியுள்ளதாகவும், அதை குறைக்கும் வகையில், அமித்ஷா உள்பட கூட்டணி கட்சியினருக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
அதிமுகவில் குறைந்தது 1 முதல் அதிக பட்சமாக 3 பேருக்கு அமைச்சரவையில் பதவிகள் கிடைக்கலாம் என்றும் அதே நேரத்தில், தமிழகத்தை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் பதவிக்கு ஆபத்து உள்ளதாகவும், தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் மாற்றப்படலாம் என்றும் தலைநகரில் தகவல்கள் உலா வருகின்றன.