சென்னை: அதிமுகவில் எழுந்துள்ள முதல்வர் வேட்பாளர் பிரச்சினைகளுக்கு இடையே ஓபிஎஸ் தரப்பு சில ஆண்டுகளாக வலியுறுத்தி வரும், அதிமுக வழிகாட்டுதல் குழு இன்றுஅறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பணியில் சில மூத்த அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
முதல்வர் வேட்பாளர் யார் என்பத குறித்த நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், முதல்வரையும், துணைமுதல்வரையும், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் தொடர்ந்து மாறி மாறி சந்தித்து பேசி வருகின்றனர்.
இன்று காலை  முதலமைச்சருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, காமராஜ் சந்தித்து பேசினார்.  ஏற்கனவே அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், ஜெயக்குமார் சந்தித்தனர். அதையடுத்து,  அரசு கொறடா ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து,  ஓபிஎஸ் தரப்பினருக்கு உறுதிமொழி அளித்தபடி, அதிமுக வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருவதாகவும், வழிகாட்டு குழு எத்தகைய அதிகாரம் கொண்டது என்பதை இறுதி செய்யும் ஆலோசனை நடைபெறுவதாகவும், அதை இறுதி செய்யும் பணியில்  அதிமுக மூத்த நிர்வாகிகள் தீவிரம் காட்சி வருவதாகவும் தகவல்கள் வெளியாக உள்ளது. அதற்கு எடப்பாடியும், ஓபிஎஸ்-சும் ஒத்துக்கொண்டால், இன்று அதிமுக வழிகாட்டுதல் குழு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ.மறைவைத் தொடர்ந்து, அதிமுக உடைந்து மீண்டும் இணைந்த நிலையில்,  ஓபிஎஸ்ஸுக்கு கட்சியின் அவைத்தலைவருக்கு அடுத்து பொதுச் செயலாளருக்கு இணையான ஒருங்கிணைப்பாளர் அந்தஸ்தும், துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அதன் பின்னர் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால், அது இதவரை நிறைவேற்றப்படவில்லை. ஆட்சியில் ஓபிஎஸ்ஸுக்குப் பெரிய பதவி இல்லாத நிலையில் கட்சியிலும் தன் கோரிக்கை நிறைவேறாததால் தேர்தலை நெருங்கும் நேரத்தில் ஓபிஎஸ் ஆட்சேபம் தெரிவிக்க ஆரம்பித்தார். இதன் தொடர்ச்சியாக அடுத்த தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. இதனால் எடப்பாடிக்கும் ஓபிஎஸ்-க்கும் இடையே மோதல் தொடர்கிறது.
இந்த நிலையில், ஓபிஎஸ்ஸின் திடீர் எதிர்ப்பு,  அதிமுகவுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் அதிக ஆதரவாளர்கள், அமைச்சர்களைக் கைக்குள் வைத்துள்ளது யார் என்கிற போட்டியும், அதிமுகவுக்குள் மூத்த தலைவர்கள் மோதலும் தேர்தலில் கடும் பாதிப்பை உருவாக்கும் என்பதால், இருவரையும் சமாதானப்படுத்துவதில் சில அமைச்சர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஓபிஎஸ்-ன் கோரிக்கை நிறைவேற்றப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.