சென்னை: அதிமுக ஆட்சியில் திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்பட பலரது மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திண்டிவனத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்பி கனிமொழி அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியை கீழ்த்தரமாக விமர்சித்துஇருந்தார். இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர்மீது அப்போதைய அதிமுக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது.
அதுபோல, திமுக எம்.பி. தயாநிதி மாறன், கொரோனா விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி அரசின் செயல்பாடுகளை விமர்சித்தார். உண்மைக்க புறம்பாக பேசியதாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்பட பல அரசியல் கட்சியினர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டது.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாறி விட்டதால், எதிர்க்கட்சிகள், போராட்டம் நடத்தியவர்கள், பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வாபஸ் பெற்று வருகிறது.
இந்த நிலையில், கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் இளங்கோவன் ஆகியோர் தங்கள்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனுமீதான விசாரணை இன்று விசாரிக்கப்பட்டது. அப்போது அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெற தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கான அரசாணையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மூவர் மீதான அவதூறு வழக்குகளையும் ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.