டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்று வழக்கு 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும் என கூறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஓபிஎஸ் கோரிகை நிராகரிக் கப்பட்டு, 6ந்தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் கறாராக கூறியது.
இதையடுத்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. கட்சிகள் விதிகளில் செய்யப்பட்ட மாற்றத்தை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க மறுப்பதாகவும், அதற்கு காரணமாக உச்சநீதிமன்ற வழக்கை இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது. இதனால், இந்த வழக்கில் நீதிமன்றம் இடைக்கல உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும்கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், ஓபிஎஸ் தரப்பில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டிய மூத்த வழக்கறிஞர் வாதாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கின் விசரணையை வரும் 12 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது. தேர்தல் ஆனையத்தின் நடவடிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுங்கள் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.