சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கில் 2 நாட்கள் காரசார விவாதங்கள் நடைபெற்ற நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனு மீது விசாரணை முடிவடைந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கை இன்று காலை 10.30 மணிக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்றம் நீதிபதி விசாரணையை தொடங்கினார். நேற்று முன்னதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, அதுகுறித்து பதில் அளிக்க இபிஎஸ் தரப்புக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று விசாரணை தொடங்கியதும், இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணன், அதிமுக பொதுக்குழு விதிப்படிதான் கூட்டப்பட்டது. ஜூலை 11-ல் பொதுக்குழு கூட்டப்படும் என ஜூன் 23 பொதுக்குழுவிலேயே அறிவிக்கப்பட்டது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27-ஆம் தேதி தயாரிக்கப்பட்டது. ஜூன் 23 பொதுக்குழுவுக்கு நிகழ்ச்சி நிரல் ஏதும் தயாரிக்கப்படவில்லை. ஜூலை 1ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தலைமை கழக நிர்வாகிகள் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டது. ஜூன் 23 பொதுக்குழு தீர்மானங்கள் என ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தவை வரைவு தீர்மானங்கள் தான் என்றும் சுட்டிக்காட்டினார். பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்தனர் என்றும் கூறப்பட்டது.
அப்போது, பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஈபிஎஸுக்கு ஆதரவாக உள்ளார்களா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, 2,665 பொதுக்குழு உறுப்பினர்களின் முடிவை மட்டும் வைத்து ஒட்டுமொத்த 1.50 கோடி தொண்டர்களின் விருப்பமாக கருத முடியாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆனால், இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், கட்சியின் சட்ட திட்டங்களில் திருத்தம் மற்றும் தலைவர்களே தேர்ந்தெடுப்பது பொதுக்குழுதான் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொதுக்குழு குறித்து தொலைகாட்சி, பத்திரிக்கை மூலமாக தெரிந்து கொள்வது ஏற்று கொள்ள முடியாது. முறையாக நிகழ்ச்சி நிரல் தயாரித்து உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக எந்த தீர்மானமும் ஜூன் 23 பொதுக்குழுவில் முன் வைக்கப்படவில்லை. காலி இடத்தை ஏற்படுத்தி அதிமுக தலைமை இடத்தை பிடிக்க முயன்றனர் என குற்றம் சாட்ப்பட்டது.
அப்போது, நீதிபதி ஜெயச்சந்திரன், ஒருங்கிணைப்பாளர் பதவி காலம் 5 ஆண்டுகள் உள்ள நிலையில், அது எப்படி காலாவதி ஆகும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த இபிஎஸ் வழக்கறிஞர், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடைமுறைகளுக்கு கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கவில்லை. ஒப்புதல் அளிக்காததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவாதியாகிவிட்டன என்று விளக்கினார். மேலும் அதிமுக பொதுக்குழு அதிமுக விதிப்படிதான் கூட்டப்பட்ட்டது என்றும் கூறினார்.
இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.