சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.. ஓபிஎஸ் மன்னிப்பை தொடர்ந்து விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ .பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அவரது வாதத்தை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சட்டப்படி பொதுக்குழுவினை நடத்திக் கொள்ளலாம் என்றுஅனுமதி வழங்கினார். இதையடுத்து நீதிபதி மீது ஒபிஎஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும் இந்த வழக்கை அவர் விசாரிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
ஆனால், அதை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்க மறுத்ததுடன், நேற்யை விசாரணையின்போது, நீதிபதியை மாற்றக் கோரி ஓபிஎஸ் தலைமை நீதிபதியிடம் முறையிட்டது, நீதித்துறையை களங்கப்படுத்தும் செயல், கீழ்த்தரமான செயல் என தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், அதிமுக பொதுக்குழு வழக்கை நானே விசாரிப்பேன் எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று பிற்பகல் 2.15க்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓபிஎஸ் தரப்பில் மன்னிப்புக் கோரப்பட்டது. நடந்தது நடந்ததாக இருக்கட்டும் ; திறந்த மனதோடு வழக்கு நடத்துங்கள் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. பின்னர் நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில், தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்ட கடிதத்தை ஓபிஎஸ் தரப்பு திரும்பப் பெற்றது.
இதையடுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.