சென்னை:
திமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர புதிய முடிவுகள் எடுக்க தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவது இல்லை எனக்கூறி பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை நீதீபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திட்டமிட்டபடி பொதுக்குழு நடத்தலாம், அதில் 23 தீர்மானம் மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாமே தவிர எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.