திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதியஜனதா கட்சிக்கும் அதிமுகவும் இடையே சலசலப்பு நீடித்து வருகிறது.  இதன் எதிரொலியாகத்தான், பொள்ளாச்சி விவகாரததில் அதிமுக நபர் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அதிமுக பொதுக்குழுவிலும்  பாஜகமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனால், அதிமுக கூட்டணியில்  இருந்து பாஜக விரட்டியடிக்கப்பட்டால், தமிழகத்தில் பாஜகவின் நிலைமை செல்லாக்காசாகி விடும். அந்த அச்சத்தினாலேயே,  அதிமுகவை மிரட்டும் நோக்கில்  பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை, பாஜக தலைமை, தனது ஏவல்துறையான சிபிஐ மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மேலும் சிலரை கைது செய்து பயமுறுத்த எண்ணியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பொள்ளாசி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சிக்கிய இளம்பெண்களின் அலறல் இன்னும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த கொடூர சம்பவம்,  தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், மக்களை குலைநடுக்க வைத்தது. அரசியல் கட்சியினரின்  ஆதரவுடன், அந்த பகுதியைச் சேர்ந்த பெண்களை சமூகவலைதளம் மாணவிகள், இளம் பெண்கள், குடும்ப பெண்கள் நூற்றுக்கணக்கானோரை ஏமாற்றி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், ஆபாசமாக வீடியோ எடுத்தும் மிரட்டி பணம் பறித்த விவகாரம் அதிமுக ஆட்சிக்கு விழுந்த கரும்புள்ளி என்பதை மறுக்க  முடியாது.

இந்த  கொடூர சம்பவத்தில் அரசியல் கட்சியினர் சம்பந்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் பரவிய நிலையில், காவல்துறை விசாரணை, சிபிசிஐடி  விசாரணை என்ற பெயரில் அவைகள் முடக்கப்பட்டன. இந்த பாலியல் புகார் தொடர்பான  விவகாரத்தில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 போ் மட்டுமேகைது செய்யப்பட்டனர். ஆனால், முக்கிய புள்ளிகள் கைது செய்யப்படாமல் தப்பிக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தும், அதை அரசு நிரூபிக்க தவறியதால், அவையும் ரத்து செய்யப்பட்டது. இதிலும் அதிமுகவின் அரசியல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரும் சேலம் சிறையில்  ஜாமின்கூட கோராமல் ஆட்சியாளர்களின் ஆதரவுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், தொடக்கத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்ட சிபிஐ, குற்றப்பத்திரிகையும் தாக்கல்செய்தது. ஆனால், அதன்பிறகு எந்தவித முன்னேற்றமும் காட்டாமல் கடந்த 2 ஆண்டுகளாக குறட்டை விட்டு வந்தது.

அதுபோல, இநத் வழக்கில், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு என்பவர், கைது செய்யப்படுவதற்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.  அதில்,  “என்னிடம் பல ஆதாரங்கள் இருக்கின்றன. அதை நான் வெளியிட்டால் இன்றைய ஆளும்கட்சி தாங்காது’ என மிரட்டியிருந்தார். அவர் பேசிய தகவல்கள் ‘சமூக வலைதளங்களில் வைரலாகின. அதையடுத்தே, திருநாவுக்கரசு  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து வீடியோக்களை கைப்பற்றுவதில் காவல்துறையினர் பெரும் அக்கறை எடுத்துக் கொண்டனர்.

கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசின் தகப்பனாரின்  (காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்) பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். இவரை தேடி வரும் பெண்களில் சிலரும்  பாலியல் பிரச்சினையில் சிக்கியதாக கூறப்பட்டது.  இதைத்தொடர்ந்து, அவர்களது பைனான்ஸ் நிறுவனம்மீது பொதுமக்கள்தாக்குதல் நடத்திய சம்பவங்களும் அரங்கேறின. தொடர்ட்ந்து இந்த பாலியல் விவகாரத்தில், பல  அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.

முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசிடம் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து,  காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரிடம் விசாரணை நடத்தப் பட்டது.

 கோவை மாவட்ட திமுக நிர்வாகி தென்றல் செல்வராஜின் மகன் தென்றல் மணிமாறன் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்.

பொள்ளாச்சி நகர அம்மா பேரவை செயலாளர் பார் நாகராஜனும் விசாரணைக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். தொடர்ந்து மற்றொரு வழக்கில் கைது செய்யட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.

ஆனால், பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை.  திருநாவுக்கரசு கூறிய தகவல் அப்படியே முடக்கப்பட்டது. இதில், என்ன பேரம் நடைபெற்றது என்பது இதுவரை வெளிவராத ரகசியம்.

இந்த சூழலில்தான், தற்போது அதிமுக நபர் உள்பட 3 பேரை சிபிஐ கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது பாஜகவின் வழக்கமான பக்கா அரசியல்  என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை பெறும் நோக்கில், சிபிஐ மூலம் அதிமுகவை மிரட்டத் தொடங்கி உள்ளது

இந்த வழக்கு விவகாரத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக குறட்டைவிட்ட சிபிஐ, தற்போது, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மத்திய ஆட்சியாளர்களால் சிபிஐ-ன் தூக்கம் கலைக்கப்பட்டு உள்ளது.  இதனால் சிபிஐயும் சுறுசுறுப்பாக இயங்குவதுபோல பாசாங்குகாட்டத் தொடங்கி உள்ளது.

நாங்கள் இப்படித்தான்… எங்களை பகைத்துக்கொண்டால் இப்படித்தான் செய்வோம் என்று மிரட்டும் நோக்கில்,  அதிமுவுக்கு பயத்தை காட்டத் தொடங்கி உள்ளது.  ஆனால், பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக தலைவணங்குமான என்பதும் கேள்விக்குறியே.

ரஜினி உள்பட சில ஜாதி, மத கட்சிகள் மற்றும் அதிமுகவைக் கொண்டு, தமிழகத்தில் காலூன்ற நினைத்த பாஜகவின் கனவு, ரஜினியின் அறிவிப்பு காரணமாக தவிடுபொடியானது. இதனால் தமிழகத்தில், பாஜகவின் நிலை அதோகதியாகி உள்ளது. இதனால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நோக்கில் பாஜக செயல்படத் தொடங்கி உள்ளது.

பாஜக என்ற ஒரு கட்சி தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு எழுந்துள்ளது. அதற்கு, தற்போதைய சூழலில்  அதிமுக காலடியில் விழுவதைவிட வேறு வழியில்லை என்பதை மறுக்க முடியாது

ஏனென்றால், ஏற்கனவே நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட கரு.நாகராஜன் வெறும் 1,368 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது அனைவருக்கும் தெரியுதும். அதாவது, அவரது வாக்கு சதவிகிதம் 0.77 சதவீதம் மட்டுமே.  ஆனால், அங்கு நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள் 2,348. அதாவது 1.33 சதவீதம். நோட்டா அளவுக்குக்கூட வாக்குகளை பெற முடியாத பாஜக தனித்து போட்டியிட்டால், அதன் நிலை என்னவாகும் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

இதுபோன்ற ஒரு சூழலில் உள்ள பாஜக, தமிழக அரசியல் களத்தில் தனித்துவிடப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் பொள்ளாச்சி விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றன.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில்  தற்போது கைது செய்யப்பட்டுள்ள  பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகேயுள்ள சங்கம் பாளையத்தைச் சேர்ந்த ஹேரேன்பால் (29), வடுகபாளையத்தில் உள்ள விகேவி லேஅவுட்டைச் சேர்ந்த பாபு என்ற ‘பைக்’ பாபு (27), வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம் (34) ஆகிய மூவரிடமும கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே விசாரிக்கப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட காரணம் என்ன  என்றும், கடந்த 2 ஆண்டுகளாக சிபிஐ நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்துகொண்டிருந்தது என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும், நேற்று நடைபெற்ற (09/01/2020) நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, செயற்குழுவிலும் பாஜகவின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் எழுந்ததாக கூறப்படுகிறது. அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி  பாஜகவை மீண்டும் கடுமையாக சாடியுள்ளார்.

தேசிய கட்சிகள் அதிமுகவுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவை நம் கட்சியின் தோள் மீதோ, திமுகவின் தோள் மீதோதான் ஏறி பயணிக்க வேண்டும் என அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். நேரடியாக பாஜகவின் பெயரைச் சொல்லா விட்டாலும், அதிமுக கூட்டணியில் இருக்கும் தேசிய கட்சி பாஜக தான் என்பது எல்லோருக்குமே தெரியும்

ஏற்கனவே அதிமுக தேர்தல் பரப்புரை தொடக்க விழாவில் கே.பி.முனுசாமி பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி இல்லை. இது திராவிட மண். ஜெயலலிதா, கருனாநிதி என்கிற ஆளுமைகள் இல்லாத நேரத்தில் சிலர் உள்ளே புகுந்து ஆதாயம் தேட நினைக்கிறார்கள். எந்த தேசிய கட்சியும் உள்ளே நுழைந்து விடாமல் காத்து வருவது திராவிட இயக்கம்” என்று காரசாரமாகப் பேசியதையும் நாம் மறந்து விட முடியாது.

கே.பி.முனுசாமியின் அதிரடி பேச்சுக்கள் பாஜக தலைவர்களிடையே பயத்தை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினாலும் மிகையாது. ஏனென்றால், பாஜக மலைபோல நம்பியிருந்த ரஜினி காலைவாரி விட்டதால், தற்போது அதிமுகவின் காலைபிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

அதிமுகவும்  பாஜகவை கைவிட்டால், தமிழகத்தின் பாஜகவின் நிலை கேள்விக்குறியதாகவும், கேலிக்குறியதாகி விடும் என்பதை மறுக்க முடியாது. அந்த அச்சம் காரணமாக, தனது பயத்தை  வெளிக்காட்டிக்கொள்ளாமல், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை மீண்டும் தூசித்தட்டி வருகிறது.

அதன் எதிரொலிதான் அருளானந்தம் உள்பட 3 பேர் கைது நடவடிக்கை. மேலும் சில அதிமுகவினரை கைது செய்து, அதிமுக தலைமைக்கு மேலும் பயத்தை காட்ட பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாகவும், சிபிஐ-யைக் கொண்டு அதிமுவை  மிரட்டி பணிய வைக்கும் நடவடிக்கையை பாஜக தொடங்கியுள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் நடவடிக்கைகள் மக்களிடையே வெறுப்பையே சம்பாதித்து வருகிறது  என்பதற்கு சாட்சி தற்போதைய விவசாயிகளின் போராட்டமே. தொடர்ந்து மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வரும் பாஜகவின் நடவடிக்கைகள் மக்களிடையே கடுமையான அதிருப்தியை உருவாக்கி வருகின்றன. மேலும்,  குறுக்கு வழியில் செயல்பட்டு, மாற்று  கட்சியினரை வளைத்துபோடுவதும், மாநில ஆட்சிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளும் பொதுமக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.  இதனால், பாஜகவுக்கு மக்களிடையே வெறுப்புதான் அதிகரித்துள்ளது.

இதை சரியாக புரிந்துகொண்டுள்ள அதிமுக, கூட்டணியில் இருந்து  பாஜகவை எப்படி கழற்றி விடுவது என்று செய்வதறியாமல் திகைத்து வருகிறது. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததாக அதிமுக தலைவர்களே கூறி வருகின்றன.

மூத்த அதிமுக தலைவர் கே.பி.முனுசாமி உள்பட அதிமுகவின் பல தலைவர்கள், பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து விலகிச்சென்றால் நல்லது என்று பகிரங்கமாகவே தொடர்ந்து பேசி வருகின்றனர். அதிமுக பொதுக்குழு, செயற்குழுவிலும், பாஜகவின் எதிரான கருத்துக்கள் முழங்கப்பட்டதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், வேறு வழியின்றி, அதிமுக கூட்டணியில் தொடர பாஜக பகிர பிரயத்தனம் செய்து வருகிறது. இதற்கு குறுக்கு வழியாக, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை வைத்து அதிமுகவிடம்  காரியம் சாதித்துக்கொள்ள தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கி உள்ளது.

 இந்த விவகாரத்தில் மேலும்  சில அதிமுகவினரை கைது செய்து அரசியல் நாடகத்தை அரங்கேற்ற திட்டமிட்டு உள்ளதாகவும்,  அதன்மூலம் அதிமுகவை வழிக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ள உள்ளதாகவும் தாமரை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், சிபிஐ-ன் நடவடிக்கை, அதிமுக நபர்  கைது விவகாரத்தை, சட்டமன்ற தேர்தலில்  திமுக தனக்கு சாதகமாக முயற்சித்து வருகிறது. அதன் எதிரொலிதான் இன்றைய கனிமொழியின் போராட்டம்.

பொள்ளாச்சி விவகாரம் இவ்வாறு அரசியலாக்கப்பட்டு வரும் நிலையில், அதிமுக உள்ளுக்குள் மிரண்டு போயிருந்தாலும், வெளிப்பார்வையில், பாஜகவின் மிரட்டலுக்கு அதிமுக பயப்படாது என்ற தோற்றத்தையே உருவாக்கி வருகிறது.

மேலும்,  இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ எப்போது முடித்து, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு எப்போது வரும், எப்படி வரும், அதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது யாருக்கும் தெரியாது. அதனால், இந்த விவகாரம் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்காத வகையிலும், பாஜக, சிபிஐ-ன் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையிலும் இறங்க அதிமுக தலைமை தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக தலைவர்கள், பேச்சாசளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. திமுக, அதிமுக கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா? என்பது இன்னும்ஓரிரு வாரங்களில் தெரிய வரும்.. பொறுத்திருந்து பார்ப்போம்…