நாளை அதிமுக பொதுக்குழு – பாதுகாப்பு பணியில் 2500 போலீசார் குவிப்பு…

Must read

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை (23ஆம் தேதி)  நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு பணிக்கு 2500 காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இன்றே அந்த பகுதியில் கடுமையான கெடுபிடிகள் உள்ளது.  இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றை தலைமை விவகாரம், இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடுமையான மோதலை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு காவல்துறையில் மனு கொடுத்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டது. முன்னதாக, அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என  முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தியதுடன்,  பொதுக்குழு அட்டவணை, ஓபிஎஸ் அளிக்கும் மனு ஆகியவற்றை ஆராய்ந்து முடிவெடுக்கக் காவல் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள மதுரவாயல் பகுதியல் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தை சுற்றிலும் 2500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஆவடி காவல் ஆணையரகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அங்கு முதற்கட்டமாக 500க்கும் மேற்பட்ட போலீசார் பொதுக்குழு நடக்கும் இடம் அருகே குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பொதுக்குழு நடைபெற உள்ள பகுதியில்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும்,  பொதுக்குழு நடைபெறும் பகுதிக்கு 100 மீட்டர் தொலைவிலேயே இரும்பு தகடுகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் பலத்த சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

பொதுக்குழு நடக்கும் பகுதியில், வழிநெடுகிலும் கட் அவுட் பேனர்கள் வைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறு வருகிறது. இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

“ஒற்றை தலைமை” விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் தொடர்ந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுகுழு நடக்கக்கூடிய இடத்திற்கு முன்பு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

More articles

Latest article