சென்னை: அதிமுக செயற்குழுவில் ஆரோக்கியமான கருத்து விவாதம்தான் நடைபெற்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
தமிழக முன்னாள் சென்னை மேயர் சிவராஜின் 129வது பிறந்த நாளையொட்டி சென்னை தங்கச்சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், சரோஜா, பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார்.
அப்போது, செய்தியாளர்கள், அதிமுக செயற்குழு கூட்டத்தில் நடைபெற்றது மற்றும் விவசாய மசோதா எதிர்த்து நடைபெறும் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், அதிமுக செயற்குழு கூட்டத்தில் எந்தவொரு பிரச்சினையும் எழவில்லை, ஆரோக்கியமான முறையில் ஜனநாயக ரீதியில் கருத்து விவாதம் நடந்தது என்றார். மேலும், செயற்குழுவில் சசிகலா பற்றி விவாதிக்க வேண்டிய அவசியமில்லை, அது குறித்து விவாதிக்கவும் இல்லை என்றவர், முதல்வர் வேட்பாளர்கள் குறித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
வேளாண் மசோதாவால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விலை கிடைப்பது உறுதியாகி இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார். காங்கிரஸ் ஆட்சியில் அங்கம் வகித்த திமுக, விவசாயிகளுக்கு எந்தவித திட்டங்களையும் கொண்டுவராமல் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் துரோகம் இழைத்ததாக கூறியவர், வேளாண் மசோதா குறித்து திமுக திட்டமிட்ட நாடகத்தை நடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.
வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காது என்று கூறியவர், வேளாண் சட்டத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன என்றார்.
5 மணி நேரம் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில், முதல்வர் பதவிக்கான போட்டியில், ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரோ, ஆரோக்கியமான கருத்து விவாதமே நடைபெற்று என்று சப்பைக்கட்டு கட்டியுள்ளர்.