சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் 23 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்திரகுமாரி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்து  பணியாற்றி வருகிறார். தீர்ப்பை கேட்டதும் அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

1991 – 1996ம் ஆண்டுகளில், மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த அதிமுக ஆட்சியில் சமூக நல அமைச்சராக புலவர் இந்திரகுமாரி இருந்தார். அவர் பதவியைக் கொண்டு முறைகேடாக ரூ. 15.45 லட்சம் ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. ,

இந்திரகுமாரியின் கணவர் பாபு, மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி நடத்துவதாக கூறி. அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு,  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 1997ல் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சுமார் 23 ஆண்டுகளுக்கு பிறகு  இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

இன்று நீதிமன்றம் கூடியதும்,  ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என்றும்,  இந்திரகுமாரி, அவரது கணவர் பாபு, சண்முகம் ஆகியோர் மறைந்த  கிருபாகரன் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும்,  மற்றொரு நபர் வெங்கட கிருஷ்ணன் மீதான குற்றச்சாடு நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விடுவிப்பதாகவும் நீதிபதி அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து, இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும், அவரது கணவர் பாபுவுக்கும் ஐந்தாண்டு கால சிறை தண்டனையும்  விதிக்கப்பட்டுள்ளது. ஊனமுற்றோர் மறுவாழ்வுத் துறையின் முன்னாள் செயலர் சண்முகத்திற்கு மூன்றாண்டு சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை அறிவிக்கப்பட்டதும்,  இந்திராகுமாரி உடனே நெஞ்சுவலி என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.