சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், டிசம்பர் 27ந்தேதி சென்னையில் அதிமுக தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் அறிவித்து உள்ளனர்.
அதன்படி, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் டிசம்பர் 27-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கட்சித் தலைமை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக கொள்கைகளையும், ஏழை, எளிய மக்களுக்கு ஆற்றிவரும் மகத்தான சேவைகளையும், அதிமுக அரசின் சாதனைகளையும் மக்களிடத்திலே முழுமையாகக் கொண்டு சேர்த்திடும் வகையிலும்; முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.-ரின் பொற்கால ஆட்சியின் புரட்சி செயல் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தவும்; முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவாக்கிய அமைதி, வளம், வளர்ச்சி என்னும் தாரக மந்திரத்தின்படி நடைபெறும் நல்லாட்சியை மீண்டும் மலரச் செய்து,
தமிழ் நாட்டை தொடர்ந்து வெற்றிப் பாதையில் நடைபோடச் செய்திடும் வகையிலும், வருகின்ற 27.12.2020 – ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, ஒய்எம்சிஏ மைதானத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் பங்கேற்று, தேர்தல் பிரசாரப் பணிகளைத் துவக்கி வைக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
2021-ல் நடைபெற உள்ள சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் களத்தில் அதிமுக மகத்தான வெற்றிபெற, நாம் நிகழ்த்த இருக்கும் போர் முழக்கம் தான் இப்பிரசாரப் பொதுக்கூட்டம்.
இப்பொதுக்கூட்டத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும், இன்னபிற தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பங்குபெறுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.