சென்னை:
தேர்தல் முடிவை தொடர்ந்து அதிமுகவின் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் இன்று கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பங்கேற்கவிர்லலை. பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது..
இதுதவிர சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய எம்எல்ஏக்களுக்கு இக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படவில்லை.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக தலைமையகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆகியோர் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகின்றனர்.
சமீபத்தில் மதுரை எம்எல்ஏ ராஜன் செல்லப்பா இரட்டை தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், அடுத்த நாள் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், துணை முதல்வர் எடப்பபாடி பழனிச்சாமி என்று பிரிண்ட் அடித்து மேலும் சர்ச்சையை உருவாக்கினார்.
இந்த நிலையில், அதிமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இன்று கூட்டம் நடைபெற உள்ள நிலையில், திடீரென பல அமைச்சர்களை முன்னிறுத்து பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பபாடி பழனிச்சாமி என்று சில இடங்களில் போஸ்டர்கள் காணப்படுகின்றன. அதுபோல, அதிமுக பொதுச்செயலாளர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் என்றும் சில இடங்களில் போஸ்டர் காணப்படுகின்றன. இதன் காரணமாக அதிமுகவுக்குள் பல மாதங்களாக புகைந்து வந்த புகைச்சல் தற்போது பூதாகாரமாக வெளியாகி உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் இன்று காலை கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களில் கட்சி தோல்வி அடைந்தது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.