சென்னை: என் மண் என் மக்கள் என்ற பெயரிலான அண்ணாமலை நடைபயண தொடக்க விழாவை அதிமுக புறக்கணித்த நிலையில், தேமுதிக பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாலை நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணம் இன்று மாலை தொடங்குகிறது. இந்த தொடக்க விழாவில் கலந்துகொள்ள பாஜக கூட்டணி கட்சிகளான அதிமுக, தேமுதிக உள்பட பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து விட்டார். ஆனால், தேமுதிக சார்பில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திமுக அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார். அவரது நடைபயணம் இன்று மாலை ராமேஸ்வரத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழ்நாடு பாஜக சார்பில் கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதுபோல அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-க்கும், டிடிவி கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடுப்படைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என்று அறிவித்துள்ளார். இந்த நிலையில், அண்ணாமலை பாத யாத்திரை தொடக்க விழாவில் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பர் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சமீபத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி கூட்டத்துக்கு தேமுதிக அழைக்கப்படவில்லை. இது தேமுதிகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், நாங்கதான் கூட்டணியிலேயே இல்லை.. எங்களை எப்படி அழைப்பாங்க என வழக்கம் போல விரக்தியாக பேசியிருந்தார். இந்த நிலையில், தேமுதிகவுக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம் தொடக்க விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். இதையேற்று அண்ணாமலையின் நடைபயண தொடக்க விழாவில் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பர் என அக்கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் இருந்து இன்று நடைபயணம் தொடங்குகிறார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். மாநில துணை செயலாளர் கரு. நாகராஜன் நேரடியாக வந்து அழைப்பிதழை வழங்கினார். மரியாதை நிமித்தமாக தேமுதிக சார்பில், ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா மற்றும் கழகத்தினர், இந்த நடைபயண துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்கள். அவரது நடைபயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.