பா.ஜ.க. வின் முன்னாள் தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா நேற்று ஒருநாள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுவை வந்தார்.

பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என்று சுழன்ற அமித் ஷா. கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழகத்தில் அதிமுகவின் தயவை நம்பியே உள்ள போதும் அதிமுக தலைமையகத்துக்கு சென்று பேச்சு நடத்துவது ஏற்புடையதாக இருக்காது என்பதால் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் பேச்சுவார்த்தை நடந்தது.

நேற்று காலை 60 சீட்டுகள் வரை பாஜக கேட்பதாக செய்திகள் கசியவிடப்பட்ட நிலையில் நேற்றிரவு 33 சீட்டுகள் வரை இறங்கி வந்திருக்கிறது.

அதிமுக தரப்பில் 22 சீட் என்பதிலேயே விடாப்பிடியாக இருப்பதாக சொல்லப்பட்டாலும், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி யாருக்கு என்பது இன்னும் முடிவாகவில்லை.

பாராளுமன்ற தொகுதி தங்களுக்கு தேவையில்லை எம்.எல்.ஏ. சீட்டுகள் தான் எங்களுக்கு வேண்டும் எங்களுக்கு இழக்க ஒன்றுமில்லை தமிழகம் தான் எங்கள் இலக்கு என்று பாஜக உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் அதிமுக பாஜக இடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவு இன்றோ அல்லது நாளையோ வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நேற்றிரவு கிண்டி விடுதிக்கு அமித் ஷா வருகையை அறிந்த பின் வந்த முதல்வரும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ்.ஆகியோருடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு ஓ.பி.ரவிந்திரநாத்தும் வந்திருந்தது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குடும்ப அரசியல் வாரிசு அரசியல் என்று விழுப்புரம் கூட்டத்தில் முழங்கிய அமித் ஷா ஓ.பி.எஸ்.ஸின் வாரிசுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பாஜக நிர்வாகிகளின் முகம்சுழிக்க வைத்தது.