மெகா கூட்டணியை உறுதி செய்தது அ.தி.மு.க…. பா.ஜ.க., பா.ம.க.,தே.மு.தி.க, புதிய தமிழகம், த.மா.கா. உள்பட கூட்டணி கட்சிகளுக்கு 16 இடங்கள் ஒதுக்கீடு
அ.தி.மு.க.,பா.ஜ.க., கூட்டணியை ஸ்திரமாக கட்டமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக –திரைச்சீலையை மூடி விட்டு கச்சிதமாக நிகழ்ந்து கொண்டிருந்தன.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வலது- இடது கரங்களான எ.ஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி ஆகிய இரு அமைச்சர்களும் அவ்வப்போது டெல்லி பறப்பதுமாய், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி தமிழகம் வருவதுமாய் இருந்ததற்கு- அரசு நிகழ்ச்சிகள் காரணமாக சொல்லப்பட்டாலும்,பின்னணியில் மறைந்திருந்த அஜெண்டா- கூட்டணி பேச்சு வார்த்தை தான்.
அதனை நேற்று பகிரங்கமாக உடைத்திருக்கிறார் துணை முதல்-மைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ்.’’அ.தி.மு.க.வுடன் தோழமை உணர்வுள்ள கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்து விருப்பம் தெரிவித்துள்ளன .கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.அது பரம ரகசியம்.அந்த ரகசிய முடிச்சு அவிழ்க்கப்பட்ட தும்,செய்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க.,பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்க்கப்பட்டு ,இடங்களும் ஒதுக்கியாகி விட்டது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் , அ.தி.மு.க. 24 இடங்களில் போட்டியிடுகிறது.
பா.ஜ.க.வுக்கு 8 ,பா.ம.க.வுக்கு 4, தே.மு.தி.க.வுக்கு 3, கிருஷ்ணசமியின் புதிய தமிழகத்துக்கு 1 என பிரித்து அளிக்கப்பட்டுள்ளன.
ஜி.கே.வாசனின் த.மா.கா.வுக்கு அ.தி.மு.க. தொகுதிகளில் ஒன்று அளிக்கப்படும். பா.ஜ.க. தனக்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் இருந்து பாரிவேந்தரின் ஐ.ஜே.கே.உள்ளிட்ட கட்சிகளுக்கு ‘சீட்’ கொடுக்கும். இந்த கட்சிகள் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தில் போட்டியிடும்.
அ.தி.மு.க.வில் விருப்ப மனு பெறும் நிகழ்வு இன்று தொடங்கியுள்ளது. விருப்ப மனு கொடுக்க 10 ஆம் தேதி கடைசி நாளாகும்.
அதன் பிறகு கூட்டணி கட்சிகளையும், அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களையும் அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
–பாப்பாங்குளம் பாரதி