சென்னை: அதிமுக இணைய வேண்டும், அதனால் மீண்டும் அரசியலில் இறங்குவதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில்,  அதிமுகவிற்கும் அந்த அம்மாவிற்கும் ( சசிகலா ) எந்த சம்பந்தமும் இல்லை என்று  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக பெருந்தோல்வியை சந்தித்த நிலையில், பிரிந்த அதிமுக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன. ஓபிஎஸ் உள்பட மூத்த தலைவர்கள் பலர் அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதற்காக அதிமுக முன்னாள் எம்.பி. கேசி பழனிச்சாமி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “இந்தியாவில் மூன்றாவது பெரிய இயக்கமாக இருந்த அதிமுக, ஒரு சில சுயநலவாதிகளால் தொடர்ந்து சரிந்து கொண்டே வருகிறது. அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர் அவர்களிடம் கற்று கொண்டேன்.அதிமுக முடிந்துவிட்டது என நினைப்பவர்களுக்கு என்னுடைய என்டிரி ஆரம்பம் ஆகிவிட்டது” என்ற சசிகலா,  “தற்போது அதிமுகவில் சாதி அரசியல் செய்கிறார்கள். அவர்கள் தனியாக சாதி இயக்கத்தை உருவாக்கி சென்றால் யாரும் கேட்க மாட்டார்கள். ஆனால் அதிமுகவிலிருந்து செய்வதை ஏற்க முடியாது” என்றும் ஈபிஎஸ்லை மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில்,  மதுரை அதிமுக நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்  அப்போது அவரிடம், வி.கே சசிகலா கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி,   “அதிமுகவிற்கும் அந்த அம்மாவிற்கும் ( சசிகலா ) எந்த சம்பந்தமும் இல்லை” என்று ஒற்றை வரியில் பதிலளித்துவிட்டு சென்றார்.

முன்னதாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது,  “ப.சிதம்பரத்திற்கும், எங்களுக்கும் என்ன சம்பந்தம். இடைத்தேர்தலில் நிற்காமல் இருப்பது எங்களுடைய முடிவு. நடைபெற உள்ள இடைத்தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம், பரிசுகளை ஆளுங்கட்சியினர் வழங்குவார்கள். அமைச்சர்கள் மொத்தமாக குவிந்து அங்கே வேலை செய்வார்கள்.

எனவே அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த தேர்தல் சுதந்திரமாக நடைபெறாது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் என்ன நடைபெற்றதோ? அதுதான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் நடைபெறும். விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தலில், நாங்கள் 6 ஆயிரம் ஓட்டுக்கள் தான் குறைவாக பெற்றுள்ளோம். நாடாளு மன்றத்திற்கு ஒரு முறையிலும், சட்டமன்றத்திற்கு ஒரு முறையிலும் மக்கள் வாக்களிப்பார்கள்.

வெற்றி, தோல்வி என்பது அரசியல் கட்சிகளுக்கு மாறி மாறி தான் வரும். வருகின்ற 2026ஆம் சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறுவது கனவு தான். அது பலிக்காது. அந்தத் தேர்தலில் அதிமுக தனி பெரும்பான்மையுடன் வென்று ஆட்சி அமைக்கும்” என்று என்றார்.