சென்னை: திமுக கூட்டணியில் குழப்பம்  நிகழ்வதாக விமர்சித்துள்ள  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  வரும் தேர்தலில்,  210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று திமுக கூறியது. ஆனால் அதை இன்றுவரை நிறைவேற்றவில்லை.  அதனால்  செவிலியர்கள் போராடினார்கள், அவர்களை காவல்துறையைக்கொண்டு,   கைது செய்து சித்ரவதை செய்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செவிலியர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படு வார்கள் என்று உறுதி அளித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக என நான்குமுனை போட்டிகள்  ஏற்பட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து மறைமுகமாக பேசி வரும் நிலையில், மற்றொருபுறம் பிரசார பணிகளும் தீவிரமடைந்துள்ளது.

திமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், அதிமுக பாஜக கூட்டணி களப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது.   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.  பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். தவெக தலைவர் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், திருத்தணியில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக கூட்டணி அடுத்தாண்டு தேர்தலில் 210 இடங்களில் வெல்லும் என்பதற்கு இங்கிருக்கும் மக்களின் எழுச்சியே சாட்சி என்றார்.

பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களை வணங்குகிறேன். இந்த எழுச்சிப் பயணத்தில் 178 தொகுதிகளிலும் மக்களின் வரவேற்பு அமோகமாக உள்ளது. இங்கு நான் அதிக அளவிலான மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். அடுத்தாண்டு தேர்தலில் திருத்தணி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான வெற்றி விழா பொதுக்கூட்டம் போல் காட்சியளிக்கிறது. நான் வருகின்ற வழியில் மக்கள் வெள்ளம் அலைகடலென வந்தார்கள். நம் வெற்றியை உங்கள் எழுச்சியில் பார்க்க முடிகிறது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.

அதிமுகவைப் பார்த்து ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறார். அதிமுகவில் கூட்டணி இல்லை என்கிறார். உண்மையில் உங்கள் கூட்டணியில்தான்  பலவீனம் ஏற்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே, காங்கிரஸ் வேறொருவருடன் பேசிக்கொண்டிருப்பதாக செய்தி. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரும், செல்வப் பெருந்தகையும் ஆட்சியில் பங்கு கேட்போம் என்கிறார்கள். திருமாவும் காலச்சூழலுக்கு ஏற்ப கோரிக்கை வைப்போம் என்கிறார். இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று கம்யூனிஸ்ட் சண்முகம் சொல்கிறார்.

ஸ்டாலின் அவர்களே அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். 2011-21 வரை 10 ஆண்டுகள் பல்வேறூ திட்டங்கள் கொடுத்தோம். சிறப்பான ஆட்சி வழங்கினோம். மதச்சண்டை, ஜாதிச்சண்டை கிடையாது. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.

இன்று போதை பல்வேறு வடிவங்களில் விற்பனையாகிறது. தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது. மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பலமுறை நாங்கள் சொல்லிவிட்டோம். போதை ஆசாமிகளால் தான் கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல்கள் நடக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாத திறமையற்ற பொம்மை முதல்வர் ஆள்வதால் தான் இந்த நிலைமை.

கள்ளக்குறிச்சியில் முதல்வர் பேசும்போது, அதிமுக ஆட்சியில் 5% வாக்குறுதி தான் நிறைவேற்றப்பட்டது என்று பச்சைப்பொய் சொல்கிறார். உங்கள் தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்பு வெளியிட்டீர்கள். நான்கில் ஒரு பாகம் கூட நிறைவேற்றவில்லை, கம்யூனிஸ்ட் கட்சியே விமர்சிக்கிறார்கள். இப்படி ஆட்சி செய்துவிட்டு அதிமுக மீது பழி சுமத்துகிறீர்கள். அதிமுக ஆட்சியில் நாங்கள் செய்த சாதனை, ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவந்தோம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி 400 கோடியில் கொண்டுவந்தோம், மக்களை நெஞ்சை நிமிர்த்தி சந்திக்கிறோம். உங்களால் ஒரு திட்டமாவது கொண்டுவர முடிந்ததா?

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் கொடுப்பதாகச் சொல்லி கொடுக்கவில்லை, அதனால் போராடுகிறார்கள். செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று சொன்னார்கள் செய்யவில்லை, அதனால் போராடினார்கள், கைது செய்து சித்ரவதை செய்கிறார்கள். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செவிலியர்கள் நிரந்தரப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். எப்போது கேட்டாலும் நிதி இல்லை என்கிறார் முதல்வர். ஆனால், கார் பந்தயம் நடத்தவும் பேனா வைக்கவும் நிதி இருக்கிறது.

மக்களுக்கு கொடுக்க நிதி இல்லை. எப்போது பார்த்தாலும் மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை கொடுத்தேன் என்கிறார் ஸ்டாலின், உங்கள் வீட்டுப் பணத்தையா கொடுத்தீர்கள்? அதுவும் அதிமுக சார்பில் நானும் சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டமன்றத்திலும், பொதுக்கூட்டங்களிலும் பேசி அழுத்தம் கொடுத்த காரணத்தால் வேறு வழியின்றி, 28 மாதம் கழித்துத் தான் உரிமைத் தொகை கொடுத்தார். இப்போது மேலும் 17 லட்சம் பேருக்கு விதிகளைத் தளர்த்தி உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்துள்ளார். அதுவும் பெண்களின் கஷ்டங்களைப் பார்த்து கொடுக்கவில்லை, அடுத்தாண்டு தேர்தல் வருவதால் ஓட்டுக்காகத்தான் கொடுக்கிறார்.

அதிமுக ஆட்சியில் விவசாயத் தொழிலாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. மேலும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள், கோழிகள் கொடுக்கப்பட்டன. இவை எல்லாவற்றையும் நிறுத்திவிட்டனர். அதிமுக ஆட்சி அமைந்ததும் இவை எல்லாம் தொடரும். திருமண உதவி திட்டம் தொடரும், மணமகனுக்கு பட்டுவேஷ்டி, மணமகளுக்கு பட்டுச்சேலை வழங்கப்படும். பெண்களுக்கு தீபாவளி தோறும் சேலை வழங்கப்படும். பட்டியலின, ஏழை, நெசவாளர்கள் உள்ளிட்டோருக்கு மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.

கொரோனா காலத்தில் மாணவர்களின் மன உளைச்சலை போக்க ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். கொரோனா காலத்தில் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, ஓராண்டு காலம் ரேஷன் கடைகளில் விலையில்லா அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்டப் பொருட்கள் கொடுக்கப்பட்டன; மேலும், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் நிவாரணத் தொகையும் கொடுக்கப்பட்டது.

அதேயாண்டு தைப் பொங்கல் வந்தபோது, பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட ஏதுவாக பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அப்போது ஸ்டாலின் 5 ஆயிரம் கொடுக்கச் சொன்னார். அதையே திருப்பிச் சொல்கிறோம், ஸ்டாலின் அவர்களே உங்கள் ஆட்சியில் ஏழைகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை, ஆட்சி முடியப்போகிறது. இந்த இறுதி கட்டத்தில் இப்போதாவது ஏழை மக்கள் மகிழ்ச்சியோடு தைப்பொங்கல் கொண்டாட 5 ஆயிரம்ரூபாய் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

[youtube-feed feed=1]