சென்னை:  அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின்  54வது ஆண்டு தொடக்க நாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்குஎடப்பாடி மரியாதை செய்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அதிமுகவின் தொடக்க நாளையொட்டி, மு  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, “அண்ணா வழி திராவிடம், வாழ்விலக்கான அரசியல்” என்ற மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

 

இந்த நிகழ்வில், அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார்  மற்றும் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மக்கள் இயக்கம் மட்டும் அல்ல, அது ஒரு உணர்வு. தமிழ்நாட்டுக்கு, தமிழக மக்களுக்கு பிரச்னை என்றால், அதற்கான முதல் குரல் கொடுப்பவன் அதிமுக தொண்டன் தான். நம் தமிழக மக்களுக்கான குரலாக, நாளை மக்களுக்கான ஆட்சியை அமைக்கப் போகிறோம் என்ற பொறுப்போடு, மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க வேண்டிய பெரும் கடமை நமக்கு இருக்கிறது என்ற அர்ப்பணிப்போடு, எழுச்சிப் பயணங்களில் நான் செல்லும் இடங்களில் எல்லாம் நீங்கள் அளித்த உத்வேகத்தோடு, கழகக் கண்மணிகளே- வாருங்கள்! மக்களை வதைக்கும் இந்த விடியா அரசை வீழ்த்துவோம், தமிழகத்தை மீட்கும் லட்சியதோடு, அம்மா கண்ட நூற்றாண்டு கனவு நோக்கி பீடுநடை போடுவோம்! நாளை நமதே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://patrikai.com/we-will-overthrow-the-dmk-government-that-imposed-tax-burdens-on-the-people-edappadi-statement-on-the-occasion-of-the-aiadmk-54th-anniversary/