சென்னை,

மிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு நேற்று கூடியது. அதைத்தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகலை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய மூத்த நிர்வாகிகள் நாளை டில்லி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில்  சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுக பல அணிகளாக சிதறுண்டது. இந்நிலையில், ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையிலான அணிகள் சமீபத்தில் இணைந்து கட்சியை சசிகலா குடும்பத்திடம் இருந்து மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் தலைமையில் 19 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.  அவர்கள் கவர்னரை சந்தித்து எடப்பாடியை மாற்ற கோரி கடிதம் கொடுத்தனர். இவர்களை டிடிவி தரப்பினர்  கர்நாடகாவுக்கு அழைத்துச் சென்று சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில்  அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பெரும்பாலான அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்கியமாக இரட்டை இலையை மீட்பது குறித்தும்,  அதிமுக கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியும், அவர் நியமித்த நியமனங்கள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், டிடிவி தினகரன் அறிவிக்கும் கட்சி நிர்வாகிகள் பட்டியல் செல்லாது என்றும், ஜெய லலிதா நியமித்தவர்கள் அதே பதவியில் தொடரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இனிமேல் அதிமுகவில் பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது, அந்தப் பதவி ரத்து செய்யப்படுகிறது என்றும், பொதுச்செயலாளருக்கு உரிய பொறுப்புகள் அனைத்தும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு  அளிக்கப்படுவதாகவும் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானங்களை டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில தாக்கல் செய்ய எடப்பாடி, ஓபிஸ் தரப்பினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக, ஏற்கனவே இரு அணிகள் சார்பில் தாக்கல் செய்ய பிரம்மாண பத்திரங்களை வாபஸ் பெற்று, மீண்டும் இரட்டை இலை சின்னதை மீட்க தேவையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.

இதற்கான பணிகளை கட்சியின் மூத்த நிர்வாகிகளும், வழக்கறிஞர் அணியினரும் முடுக்கி விட்டுள்ளதாகவும், விரைவில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள்,  அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மான நகலுடன் நாளை  டில்லி சென்று தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளை சந்தித்து தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.