எடின்பர்க் :
ஸ்காட்லாந்தில் உள்ள இன்வெர்ன்ஸ் மற்றும் அயர் யுனைடெட் அணிகளுக்கு இடையே கடந்த இருதினங்களுக்கு முன் கால்பந்தாட்ட போட்டி நடந்தது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பார்வையாளர்கள் யாரும் கால்பந்தாட்ட மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.
இந்தப் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் இருந்ததால், இந்த போட்டியை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது, இதற்கு 13 டாலர் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
போட்டியை ஒளிபரப்பு செய்ய, செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் தானியங்கி கேமரா ஏற்பாடு செய்யப்பட்டது. பந்தின் வழவழப்பான மேற்பரப்பை இந்த செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் துல்லியமாக பின்தொடர்ந்து பந்து செல்லும் திசையில் படம் பிடித்து ஒளிபரப்பும் என்ற நம்பிக்கையில் களமிறங்கிய தொழில்நுட்ப குழுவிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
செயற்கை நுண்ணறிவு கேமரா வழவழப்பான மேற்பரப்பை படம்பிடித்து கொண்டிருந்த நிலையில், சிறிது நேரத்தில் பந்தை விட்டுவிட்டு, அங்கு ‘லைன்ஸ்-மேனாக’ இங்குமங்கும் ஓடிக்கொண்டிருந்த நடுவரின் ‘வழுக்கை’த் தலையை படம் பிடித்தது.
இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்ததோடு, செயற்கை நுண்ணறிவு என்பது அடுத்த தலைமுறையின் தொழில்நுட்பம் என்று கூறிவருபவர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்த இந்த சம்பவத்தை வைத்து சமூக வலைதளத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.