சென்னை: வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் மனைவி திருமதி மீனா சுவாமிநாதன் காலமானார். அவர்களின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதனின் தாய் மீனா சுவாமிநாதன் உடல்நலக் குறைவால் காலமானார். இவர் பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் மனைவியும் ஆவார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது மனைவி திருமதி. மீனா சுவாமிநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் . அத்துடன் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
முதல்வருடன், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ,தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , எம்எல்ஏ வேலு, எழிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், வேளாண் ஆய்வறிஞர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களது வாழ்க்கைத் துணைவியார் மீனா சுவாமிநாதன் அவர்களது மறைவுச் செய்தியறிந்து வருந்தினேன். சிறந்த கல்வியாளராகவும், பன்முகத்தன்மையாளராகவும் விளங்கிய அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது. அவரது மறைவால் வாடும் எம்எஸ் சுவாமிநாதன் அவர்களுக்கும் , அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் , ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.