பெங்களூரு:
தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்வதுபோல ஏழை விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யுங்கள் என்று கர்நாடகா தேர்தல் பிரசார கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசும், மீண்டும் ஆட்சியை பிடிக்க பாரதியஜனதாவும் கடுமையாக பிரசாரம் செய்து வருகிறது.
தேர்தல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் களத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,
“விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்த தனது கேள்விக்கு பிரதமர் மோடியிடம் இருந்து இதுவரை எந்தவித பதிலும் வரவில்லை என்று கூறினார். நான் மோடியை சந்தித்து, பெரும் தொழிலதிபர்களின் கடனை தள்ளுபடி செய்ததைப் போல ஏழை விவசாயிகளின் கடனையும் தள்ளுபடி செய்யுங்கள் என்று கேட்டேன், ஆனால் அதற்கும் அவர் பதிலளிக்கவில்லை என்று கூறிய ராகுல்,
சமீபத்திதில் கர்நாடகாவில் பேசிய மோடி, ‘நாங்கள் சொல்வதைச் செய்வோம் என்று கூறுகிறார். ஆனால், அவர்தான் தேர்தல் வாக்குறுதியின் போது ரூ. 15 லட்சம் உங்கள் ஒவ்வொருவரது வங்கியில் டெபாசிட் செய்வதாக கூறினார், ஆனால் இதுவரை 10 ரூபாய்கூட டெபாசிட் செய்யவில்லையே ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.