புதுச்சேரி: ராணுவத்தில் ஆர்.எஸ்.எஸ்-ஐ வலுத்தப்படுத்தவே அக்னிபாத் திட்டத்தை மத்தியஅரசு அறிவித்து உள்ளது என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் வரை பணியாற்றும் வகையில் அக்னி பாத் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களில் இளைஞர்கள் ரயில் நிலையங்களுக்கு தீ வைத்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை, டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அக்னிபாத் திட்டம் ஏற்புடையது அல்ல, அதனால்தான் இளைஞர்கள் அதை தீவிரமாக எதிர்த்துப் போராடி வருகின்றனர். வடமாநிலங்களில் போராட்டம் பற்றி எரிகிறது,பிரதமர் மோடியின் திட்டத்தால் நாட்டில் மிகப் பெரிய கலவரம் வெடித்துள்ளது. அதனால், அக்னிபாத் திட்டத்தை மத்தியஅரசு கைவிட வேண்டும்.

ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் நாக்பூரில் பயிற்சி எடுத்து வருகின்றனர், அங்கு தடிகளை வைத்து பயிற்சி எடுக்கிறார்கள். இவர்களை அக்னிபாத் திட்டத்தின் வழியாக ராணுவத்தில் சேர்க்க முயற்சி நடக்கிறது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை சேர்ந்தவர்களை ராணுவத்தில் சேர்த்து விடலாம் என திட்டம் தீட்டுகிறார்கள்.ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை பலப்படுத்தவே அக்னிபாத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த நிபந்தனை யும் இன்றி அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் வட மாநிலங்களில் பரவியுள்ள போராட்டம் தென் மாநிலங்களுக்கும் பரவும்.

பிரதமர் தேர்தல் வாக்குறுதியாக ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என கூறினார். ஆனால் செய்யவில்லை, அதன் காரணமாகவே வேலையில்லா இளைஞர்கள் இன்று போராட்டம் நடத்துகின்றனர், அவரது அட்சி 8ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையிலும் கொடுத்த வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.