சென்னை:

கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திர கத்திரி வெயில் நாளை மறுநாள் (4ம் தேதி) தொடங்குகிறது.

ஏற்கனவே கோடை வெயில் கூரையை பிய்த்துக் கொண்டு அடிக்கிறது. இதில் நாளை மறுநாள் முதல் வரும் 28ம் தேதி வரை கத்திரி வெயில் சுட்டெரிக்கவுள்ளது. ஏப்ரல் கடைசி வாரத்திலேயே தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேலாக வெப்பம் தலைதூக்கி மக்கள் சாலைகளில் நடமாட முடியாத நிலையை உருவாக்கிவிட்டது.

பிற்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் நடமாட வேண்டாம். அனல் காற்று வீசும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிக்கும் வகையில் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்தது.

இந்நிலையில் நாளை மறுநாள் முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கி வரும் 28ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் வெயிலின் அளவு உயர வாய்ப்பு உள்ளது. அக்னி வெயிலை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று செய்வதறியாது மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

எனினும், சென்னை தவிர்த்து, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இது அப்பகுதி மக்களுக்கு ஆறுதலை அளித்தாலும், இந்த குளிர்ச்சி அக்னியை தாங்குமா? என்பது கேள்விகுறியாகவே உள்ளது.