சென்னை: தமிழ்நாட்டில் இன்றுடன் விடைபெறுகிறது ‘கத்திரி வெயில்’. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், தென்மேற்கு பருவமழை காரண மாக அவ்வப்போது மழை பெய்ததால் இந்த ஆண்டு கத்திரி வெயில் மகிழ்ச்சியையை கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிய நிலையில், மே 4ந்தேதி முதல் 28ந்தேதி வரை கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த வெயில் தொடங்குவதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் கடுமையான வெயில் நீடித்தது. அதுபோல மே மாதம் முதல்வாரத்திலும் கடும் வெப்பம் நிலவியது. மேலும் வெப்ப அலை வீசியது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதையே தவிர்த்தனர்.
ஆனால், அக்னி நடசத்திரம் காலம் தொடங்கிய ஓரிரு நாளில் வெயில் சற்று அதிகமாகவே தென்பட்டது. மே 4-ந் தேதி தொடங்கிய கத்திரி வெயில் ஆரம்பத்தில் 100 டிகிரியை தாண்டி மக்களை சுட்டெரித்தது. கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானது.
இந்த நிலையில், இந்த ஆண்டு கத்திரி வெயில் காலத்தில் வெப்பத்தின் அளவை குறைக்கும் வகையில் அவ்வப்போது கோடை மழை பெய்து மக்களை குளிர்வித்தது. மேலும் தென்மேற்கு பருவமழையும் முன்கூட்டியே தொடங்கி உள்ளதாலும், அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, தென்மாவட்டங்கள் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை பகுதிகள் அமைந்துள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்ததால், அக்னி வெயில் வந்த வழி தெரியாமல் ஓடோடி மறைந்து விட்டது. அதனால், இந்த ஆண்டு அக்னி வெயில் காலம் மக்களுக்கு குளிர்ச்சியே நிறைந்து காணப்பட்டது. அதனால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் நினைத்திருந்த மக்களிடம் இருந்து இன்றுடன் அக்னி நட்சத்திரம் விடை பெறுகிறது.