கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மம்தா அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது தோழியான நடிகை அப்ரிதா வீடுகளில் மீண்டும் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 20 கோடி ரூபாய் பணம் கட்டுக்கட்டாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆசிரியர் நியமன முறைகேடு தொடர்பாக அந்த மாநில அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளரான நடிகை அப்ரிதா முகர்ஜி வீடுகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அப்போது ரூ.20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது வீட்டிலிருந்து 20 செல்போன்கள், முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதையடுத்து, கடந்த சனிக்கிழமை (ஜூலை 23ந்தேதி) அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அப்ரிதா முகர்ஜியை அமலாக்கத்துறை கைது செய்து நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து மீண்டும் கொல்கத்தாவில் உள்ள இருவரின் வீடுகளில் சோதனையை மேற்கொண்டது. கொல்கத்தாவில் பல்கேரிய பகுதியில் உள்ள அப்ரிதா முகர்ஜியின் வீட்டில் நடைபெற்ற சோதனையின்போது மேலும் ரூ.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. அதையடுத்து, அந்த வீட்டக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய உதவியாளரான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து இதுவரை ரூ.27.9 கோடி ரொக்கம், தங்கம் மற்றும் ரூ.4.31 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து பெல்லிகுஞ்சுவில் உள்ள தொழிலதிபர் மனோஜின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேற்குவங்க அமைச்சர் வீட்டில் கோடி கோடியாக லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.