சென்னை: சென்னையின் தினசரி மின்தேவை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கிடையில், பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருவதால், தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு வருமோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் 2021ம் ஆண்டு திமுக அரசு பதவி ஏற்றதும், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, மின் தடை ஏற்படாதவாறு பல கோடி மதிப்பில் டிரான்ஸ்பார்மர்கள் மாற்றப் பட்டு, மின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனால் கடந்த இரு ஆண்டுகளாக கோடை காலத்திலும் மின்தடை இல்லாமல் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இருந்து வந்தனர்.
ஆனால், நடப்பாண்டு, கோடை வெயில் தற்போது வாட்டி வதைப்பதால் ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், மின்நுகர்வும் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு 40 கோடி யூனிட்டை தாண்டி பதிவாகி வருகிறது. இதற்கேற்ப தமிழகத்தின் மின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள், மின்தடை ஏற்படாது என்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறினர். மேலும் தேவையான உபகரணங்களும் தயாராக இருப்பதாக கூறி வந்தனர். ஆனால், சமீப காலமாக மின்நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், அதை தாக்குப்பிடிக்க முடியாமல் பல இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள், கேபிள்கள் வெடித்து, மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதை சரி செய்ய முடியாத நிலையில், மின்துறை செயலாற்றி வருகிறது. உடனே சரி செய்கிறோம் என்று கூறினாலும், குறைந்த பட்சம் 6மணி நேரம் முதல் 12மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டு வருகிறது.
மின்தடையை செய்யவோ, கேபிள்களை மாற்றவோ, போதுமான பொருட்கள் இல்லாததால், மின் தடையை நிவர்த்தி செய்வதில் பல மணி நேரங்கள் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் அரசுக்கு எதிரபாக போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் நிலவி வருகிறது. தேவையான உதிரி பாகங்கள் இல்லாமல் மின்துறையினர் அல்லல்பட்டு வருவதாக மின்துறை தொழிலாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் நாளுக்கு நாள் மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த 8-ம் தேதி 20,125 மெகாவாட் என்னும் புதிய உச்சத்தை அடைந்தது. இதை தடையின்றி மின்வாரியம் பூர்த்தி செய்தது. இ கடந்த 6-ம் தேதி இரவு10.30 மணிக்கு சென்னையின் மின்தேவை மிக அதிகபட்சமாக 4,590 மெகாவாட்டாக அதிகரித்தது. இதற்கு முன்பு, கடந்த 3-ம் தேதி 4,470 மெகாவாட் என்னும் புதிய உச்சத்தை எட்டியது.
மேலும், சென்னையின் தினசரி மின்நுகர்வு நேற்றுமுன்தினம் 97.7 மில்லியன் யூனிட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முன்பு கடந்த 3-ம் தேதி தினசரி மின்நுகர்வு 97.43 மில்லியன் யூனிட்டாக இருந்தது. இதையும் தடையின்றி பூர்த்தி செய்ததாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் நுகர்வால், பல இடங்களில் அடிக்கடி டிரான்ஸ்பார்மர்கள் பாதிக்கப்பட்டு பல மணி நேரம் மின்தடை தொடர்கிறது. இதனால், மீண்டும் மின்வெட்டு வந்துவிடுமோ என்று பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.