(கடந்த முறை நடைபெற்ற போராட்ட படம்)

சென்னை,

ம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் சென்னை பல்லவன் சாலையில் உள்ள போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த செப்டம்பரில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தின்போது அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் அறிவித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றாததால் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதன் காரணமாக சென்னையில் குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் மாணவ மாணவிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

இன்று மாலைக்குள் அரசு  பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்ததில் ஈடுபட போவதாக போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் போக்குவரத்து சங்க் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர்.

அதையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நல இயக்கம்  அழைப்பு விடுத்து பேச்சு வார்த்தை நடத்தியது. அதைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொழிலாளர் அமைப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏற்பட்டது. அதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆனால், தமிழக அரசு உறுதி அளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றும், இதுவரை 8 முறை அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடைபெற்றும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால்,  மீண்டும் போராட்டத்தில் குதித்து இருப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளது

சென்னையில்  போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 40% விழுக்காடு பேருந்துகள் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.