சென்னை,

மிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட போவதாக நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அதையடுத்து முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர் நல இயக்கம்  அழைப்பு விடுத்துள்ளது.

வரும் 19ந்தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் வருகிற 24-ந்தேதி முதல் மீண்டும்  வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தொழிற்சங்கங்கள் சார்பில் அரசுக்கும், தொழிலாளர் நல வாரியத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படுவது வழக்கமாகும். 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்துவிட்ட நிலையில், 13-வது புதிய ஊதிய ஒப்பந்தத் துக்கான முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது, அதில் முடிவு ஏதும் எடுக்கப்படாததால் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்து போராட்டத்தில் குதித்தனர்.

ஏற்கனவே கடந்த மே மாதம் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆனால், தமிழக அரசு உறுதி அளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றாததால் மீண்டும் போராட்டத்தில் குதிக்க இருப்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளது.

இதையடுத்து, வருகிற 19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை தனி துணை கமிஷனர் யாசின் பேகம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.