டெல்லி: 10ஆண்டுகளுக்கு பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் தேதியை இன்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து கொடுக்கப்படுமா என அரசியல் கட்சியினர் , பிரபல பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை அரியான, மகாராஜ்டிரா மாநிலங்களுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கும் சட்டமன்ற தேர்தலை அறிவிக்க இருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
“ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி அன்று ரத்து செய்யப்பட்டது. மோடி தலைமையிலான மத்தியஅரசு அதற்கான சட்ட திருத்தத்தை நிறைவேற்றி, அதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கி, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதாவது, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து அல்லது சுயாட்சி பறிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அம்மாநிலம் இரு பகுதியாக பிரிக்கப்பட்டது.
2019 அக்டோபர் 31ந்தேதி முதல் முதல் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரித்து, சட்டமன்றம் கொண்ட ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாகவும் மற்றும் சட்டமன்றம் இல்லாத லடாக் ஒன்றியப் பிரதேசமாக நிறுவ வகை செய்யப்பட்டது. இதுதொடர்பாக உச்சநீதி மனற்த்தில் தொடரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.
“ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பின்னர் அங்கு முன்னெப்போதும் இல்லாத அளவு அமைதியும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. அப்பகுதில் இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது. வேலைநிறுத்தம், முழு அடைப்பு, கல்லெறி தாக்குதல் போன்றவை முற்றிலும் நின்றுவிட்டது ” என மத்தியஅரசு உச்சநீதி மன்றத்தில் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்தது. கொரோனா பொது முடக்கத்துக்கு பின்னர் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் காஷ்மீர் வருகை தந்துள்ளனர் என்பதை அரசின் தரவுகளும் காட்டுகின்றன. ஆனால் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்று கூறி வந்தது.
ஆனால், மக்களின் மௌனத்தைதான் அரசாங்கம் அமைதி என்று கூறுகிறது. மக்களை பயமுறுத்தி மௌனமாக இருக்கும்படி சாதித்துள்ளது என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதுபோல பல அரசயில் தலைவர்கள் இன்றுவரை வீட்டுக்காவலில்தான் வைக்கப்பட்டு உள்ளனர். இதுமட்டுமின்றி அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்களும் நடைபெற்று வருகின்றன. எல்லா இடங்களிலும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது.
ஆனால், மற்றொரு தரப்பினர் காஷ்மீரில் அமைதி நிலவுவதாக தெரிவிக்கின்றனர். மாநிலத்தில் இப்போது வேலைநிறுத்தங்கள் இல்லை, மற்ற விஷயங்கள் இயல்பாக இருப்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பெருமை அரசாங்கத்துக்குதான் போய்ச் சேர வேண்டும் என்று கூறியிருப்பதுடன் மாநிலத்தில், ஊழலும் மோசடியும் முன்பை விட குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் இந்திய தேர்தல் ஆணையம் அங்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பாக நேரில் சென்று ஆய்வு நடத்தியது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சாந்து ஆகியோர் ஆகஸ்டு 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஶ்ரீநகர் சென்று, உள்ளூர் அதிகாரிகளை சந்தித்து தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியதுடன், அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்திடமும் அறிக்கை கோரியிருந்தனர்.
இந்த நிலையில், இன்று இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவிப்பதாக கூறியுள்ளது. இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. அரசியல் கட்சியினர், ஊடவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இதுதொடர்பாக பிரபல ஊடகவியலாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், மத்தியஅரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவதுமு,
இப்போது பிரேக்கிங்:
ஜே மற்றும் கே மற்றும் ஹரியானா மாநிலங்களுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஜே மற்றும் கேயில் முதல் சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2024-க்குப் பிந்தைய பொதுத் தேர்தல் போர்.
ஆனால் கேள்விகள்:
1) 2019ல் யூனியன் பிரதேசமாக குறைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமா இல்லையா?
2) ஜம்மு பகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா?
3) 2019 இல் இரு மாநிலங்களும் ஒன்றாகத் தேர்தலை நடத்தியபோது, தற்போது மகாராஷ்டிராவை ஹரியானாவில் இருந்து ஒதுக்கி வைப்பது ஏன்?
4) ஷிண்டே அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த அதிக நேரம் கொடுப்பதா?
5) திட்டமிட்ட மாநிலத் தேர்தலைக்கூட ஒன்றாக நடத்த முடியாத ஒரு தேர்தல்!
என விமர்சனம் செய்துள்ளார்.
இந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா? என்பது கேள்விக்குறிதான்.