சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததும், திமுக அரசு தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், தி.மு.க., அதிகாரத் திமிரின் உச்சத்தில் உள்ளது என்றும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஜுலை 10ந்தேதி) நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அங்கு தேர்தல் பிரசாரம் நேற்று மாலை (ஜூலை 8ந்தேதி) உடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் பாமக நிறுவனம் ராமதாஸ் திமுகஅரசை குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் என்பது பணம், பரிசுப் பொருட்கள் வழங்கும் மேளாக்களாக மாறி விட்டன. விக்கிரவாண்டி தொகுதியின் பல கிராமங்களில் தி.மு.க.,வினர் வீடு வீடாகச் சென்று கொடுத்த பரிசுப் பொருட்களை, பொதுமக்களே கொண்டு வந்து, தி.மு.க., அலுவலகங்களில் வீசி விட்டுச் செல்வது, எந்த இடைத்தேர்தலிலும் நடக்காத அதிசயம்.
சட்டம் – ஒழுங்கு சீரழிவு, விலைவாசி உயர்வு, ரேஷனில் பருப்பு, பாமாயில் வழங்காதது, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுப்பது, வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்காமல் ஏமாற்றுவது என, தி.மு.க., அரசின் வேதனை பட்டியல் நீள்கிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிந்ததும், மின்கட்டணத்தை 4.38 சதவீதம் உயர்த்த, தி.மு.க., அரசு முடிவு செய்துள்ளது.
பண பலத்தையும், படை பலத்தையும் பயன்படுத்தி, லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றியால், தி.மு.க., அதிகாரத் திமிரின் உச்சத்தில் உள்ளது.
அதனால், மக்கள் விரோத திட்டங்களை திணிக்க துடித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுக்க, விக்கிரவாண்டியில் தி.மு.க.,வை வீழ்த்தி, அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.