இம்பால்:
60 ஆண்டுகளை கடந்தும் தங்கள் முன்னோர்கள் வாழ்ந்த மியான்மருக்கு சென்று வருவதை கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் மணிப்பூர் தமிழர்கள்.
ஸ்க்ரோல் இணையம் வெளியிட்ட செய்திக் கட்டுரையின் விவரம் வருமாறு:
1931-ம் ஆண்டு பிரிட்டிஷார் கட்டுப்பாட்டில் மியான்மர் வந்தபோது, அரசு மற்றும் துறைமுகப் பணிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அப்போது லட்சக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் மியான்மருக்கு குடிபெயர்ந்தனர்.
1941-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டபோது, ரங்கூன் மீது ஜப்பானியர்கள் குண்டு போட்டனர். ஏராளமான இந்தியர்கள் ரங்கூனிலிருந்து மணிப்பூர் வழியே இந்தியாவுக்கு வந்தனர்.
போர் முடிந்ததும் 1948-ம் ஆண்டு மியான்மருக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், பர்மா நிர்வாகம் இந்தியர்களை அங்கீகரிக்கவில்லை. அவர்களை வலுக்கட்டாயமாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது.
அப்போது பலர் தமிழகத்துக்கு திரும்பினர். ஆனால் உணவு பழக்கமும், வாழ்க்கை முறைக்கு தமிழகம் ஒத்துவராததால் மீண்டும் பர்மா செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை மணிப்பூர் மாநிலம் மோரே பகுதியிலேயே பர்மா ராணுவம் தடுத்து நிறுத்தியது.
அப்போது முதல் இப்பகுதியிலேயே வாழத் தொடங்கினர்.
இந்த பகுதியில் தமிழர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், 1990 வரை வலுவான குழுவாகவே இருந்துள்ளனர்.அதன்பிறகு உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்காக மணிப்பூர் தமிழர்கள் தமிழகத்துக்கு திரும்ப ஆரம்பித்தனர்.
இருந்தாலும், மோரே தமிழர்கள் அப்பகுதியில் இன்னும் செல்வாக்கோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை அவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடிவருகின்றனர். இங்கு தமிழ் சங்கமும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2000- ஆண்டில் தமிழக கலைநுட்பத்துடன் கூடிய அங்காள பரமேஸ்வரி ஆலயத்தைக் கட்டினர். இந்தியாவில் மட்டுமல்ல, மியான்மரிலிருந்தும் பலர் இந்த கோயிலுக்கு வருகின்றனர்.
இப்போது, பர்மாவை பார்ப்பதற்காக தமிழர்களுக்கு எல்லை திறக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று மூதாதையர் வாழ்விடத்தையும், தாங்கள் பிறந்த இடத்தையும் பார்த்து வருகின்றனர் மணிப்பூர் தமிழர்கள்.
தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று தெரியாமலா சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள்.