மதுரை:

திருப்புரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவு திரட்டி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் மே-23க்கு பிறகு தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும்,  இந்திய பிரதமராக  ராகுல்காந்தி அவர்கள் பொறுப்பு ஏற்பது உறுதி என்று கூறினார்.

தமிழகத்தில் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 18ந்தேதி முடிவடைந்த நிலையில், காலியாக இருந்த  மேலும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டது. அங்கு இந்த மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  தேர்தலுக்கான முடிவுகள் அடுத்த மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது.

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் ஏப்ரல் 22 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. 4 தொகுதிக்கான இறுதி வேட் பாளர் பட்டியலையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மொத்தம் 4 தொகுதிகளில் 137 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அனைத்து கட்சிகளும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நான்கு தொகுதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு உள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் 1ந்தேதி ஓட்டப்பிடாரத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலை யில், நேற்று முதல்  திமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்  செய்துவருகிறார். அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும் என்றும்,  பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் மே-23க்கு பிறகு தமிழகத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா விலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும்,  இந்திய பிரதமராக  ராகுல்காந்தி அவர்கள் பொறுப்பு ஏற்பது உறுதி என்று கூறினார்.

தொடர்ந்து  சாலை வழியாக நடந்துசென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். பின்னர் வாகனத்தில் நின்றப்படி மக்களிடம் பேசினார்.  இதை தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின். அதில்,  “நிச்சயம், 4 தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றியை பெறும்” எனப் பதிவிட்டுள்ளார்.