டில்லி

தென் ஆப்ரிக்காவில் 5 வாரங்களுக்குப் பிறகு ஒமிக்ரான் தொற்று குறையத் தொடங்கி உள்ளது.

உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் வைரஸ் முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது.  அது வேகமாக பரவியதால் உலக நாடுகளில் அச்சம் ஏற்பட்டது.  இதுவரை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காணப்படுகிறது.

மருத்துவ நிபுணர்கள் கொரோனாவின் ஆரம்பக் கட்டத்தைப் போல ஒமிக்ரான் பரவல் அலையும் மிக அதிகமாக இருக்கும் என எச்சரித்தனர்.  அதற்கேற்ப நாளுக்கு நாள் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிப் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் போடும் பணிகள் தொடங்கின.

இந்நிலையில் தென் ஆப்ரிக்க அரசு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் 5 வாரங்களுக்குப் பிறகு அங்கு ஒமிக்ரான் பாதிப்பு குறைவதாகத் தெரிய வந்துள்ளது.  ஒமிக்ரான் மரண எண்ணிக்கை சற்று அதிகரித்த நிலையில் தற்போது அதுவும் குறையத் தொடங்கி உள்ளது.

இதன் மூலம் முதலில் இருந்ததைப் போல் ஒமிக்ரான் அலை தென் ஆப்ரிக்காவில் தீவிரமடையாது எனக் கூறப்படுகிறது.