டெல்லி: மத்தியஅரசு வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, தங்களது போராட்டங்களை கைவிட்டு, விவசாயிகள் 878 நாட்களுக்கு பிறகு இன்று தங்களது சொந்த ஊருக்கு திருப்பினர். டெல்லிஎல்லைப்பகுதி மக்களுக்கு குட்பை சொல்லிவிட்டு, தங்களது டிராக்டர்கள் மூலம் சொந்த மாநிலத்துக்கு திரும்பினர்.
பஞ்சாப் அரியானா எல்லையில் போராட்டக்களத்தில் இருந்து திரும்பிய விவசாயிகள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்தியஅரசு கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்தனர். இந்த நிலையில், பஞ்சாப் உள்பட சில வடமாநில விவசாயிகள், கடந்த ஆண்டு நவம்பர் முதல் டெல்லி எல்லையில் முகாமிட்டு தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர்களிடம் மத்தியஅரசு பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும், உச்சநீதிமன்றம் தலையிட்டும் போராட்டத்தை விலக்கிக்கொள்ள விவசாயிகள் மறுத்து தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். வெயில், மழை, பனி என அனைத்தையும் சமாளித்து, தங்களது போராட்டங்களை தொடர்ந்தனர். இதனால் தலைநகர் டெல்லிக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் மோடி விவசாய சட்டங்களை வாபஸ் பெறுவதாக 2021ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி மக்களிடையே அறிவித்தார். தங்களால், விவசாயிகளுக்கு புதிய சட்டம் குறித்து புரிய வைக்க முடியவில்லை. அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் கூறினார். அதைத் தொடர்ந்து, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல்நாளான நவம்பர் 29ந்தேதி அன்று பாராளுமன்ற இரு அவைகளிலும் 3 வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் குறித்து, விவசாய சங்கங்களின் கூட்டு அமைப்பான சம்யுக்ட் கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு கடந்த வியாழக்கிழமை, மத்தியஅரசிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. அவர்களின் கோரிக்கையை ஏற்பதாக மத்தியஅரசு உத்தரவாதம் வழங்கியது. அதைத்தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு இன்று (டிசம்பர் 11ந்தேதி சனிக்கிழமை) தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜனவரி 15ம் தேதி அனைத்து விவசாய அமைப்புகளும் ஒன்றுகூடி, ஆய்வுக் கூட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து சுமார் 378 நாட்களுக்கு (அதாவது 15 மாதங்கள்) பிறகு, இன்று டெல்லி எல்லையில் போராடிய விவசாயிகள் தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பி சென்றனர். டெல்லியின் எல்லைகளில் இருந்து அங்குள்ள மக்களிடம் மகிழ்ச்சியுடன் கையைசைத்து விடைபெற்று, அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் தங்கள் கிராமங்களுக்கு புறப்பட்டனர்.
இந்தநிலையில் டெல்லியை ஒட்டிய சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய எல்லைகளில் ஓராண்டுக்கு மேல் முகாமிட்டிருந்த விவசாயிகள் வீடு திரும்புவதற்கான ஆயத்த பணிகளில் நேற்று ஈடுபட்டனர். இதற்காக தங்கள் கூடாரங்களை அகற்றினர். தார்ப்பாய், ஏணி, கம்புகள், கயிறுகள், படுக்கை விரிப்புகள், கம்பி வேலிகள், கொசு வலைகள், பி.வி.சி. ஷீட்கள் ஆகியவற்றை வாகனங்களில் ஏற்றினர். வாஷிங் மெஷின், உடற்பயிற்சி கருவிகள் போன்றவற்றையும் ஏற்றினர்.
சிங்கு எல்லைப்பகுதியில் இன்று காலை திரண்ட விவசாயிகள் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உற்சாகத்தில் நடனம் ஆடி கோஷங்கள் எழுப்பினார்கள். அதேபோன்று திக்ரி எல்லை, காஜிப்பூர் எல்லையிலும் விவசாயிகள் ஒன்று திரண்டனர். காஜிப்பூர் எல்லையில் பாரதிய கிஷான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கொடி அசைத்து விவசாயிகள் சொந்த ஊருக்கு புறப்படுவதை தொடங்கி வைத்தார்.
விவசாயிகளின் ஒரு வருட உறுதியும் தியாகமும், வேளாண் சட்டத்தை வாபஸ் பெற வைத்தது. அவர்கள் இதை கொண்டாடி மகிழ்ந்தனர். வீடு திரும்புவதற்கு தளத்தை காலி செய்வதற்கு முன், சிங்கு எல்லையில் ‘பஜன்’ பாடினர்.
டெல்லி-உத்தர பிரதேச எல்லையான காஜிபூரில் உள்ள போராட்ட களத்தில் விவசாயிகள் இன்று காலை அந்த இடத்தை காலி செய்வதற்கு முன் ஆர்டாஸ் செய்தனர். சில பகுதியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து, மழை பொழிய வைத்து தங்களது சொந்த ஊர் நோக்கி விவசாயிகள் பயணத்தை தொடங்கினர்.
மூன்று விவசாயச் சட்டங்கள் மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பாக ஒரு வருடகால போராட்டத்திற்குப் பிறகு இன்று டெல்லியில் இருந்து ஷம்பு எல்லையை (பஞ்சாப்-ஹரியானா எல்லை) சென்றடைந்தபோது ஒரு விமானம் விவசாயிகள் மீது மலர் இதழ்களைப் பொழிந்து வரவேற்றது.
டெல்லி எல்லையில், விவசாயிகள் அமைத்திருந்த கூடாரங்கள் அகற்றப்பட்ட நிலையில், பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கான்கிரீட் சுவர்கள் அகற்றப்பட்டன. விவசாயிகள் அனைவரும் டெல்லியில் இருந்து முழுமையாக கலைந்து செல்ல 5 நாட்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.