சென்னை

ருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை  நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க தடை இல்லை என்று தமிழக காவல் துறை தரப்பில் கடந்த விசாரணையின்போது தெரிவிக்கப்பட்ட நிலையில், உயர்நீதி மன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.

இதன் காரணமாக கடந்த 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த நிர்மலாதேவி, தற்காலிகமாக  சிறையை விட்டு வெளியே வருகிறார்.

தன்னிடம் படித்து வரும் கல்லூரி மாணவிகளுக்கு பண ஆசை காட்டி,  தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை தேவாங்கர் தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ம் தேதி போலீசார் கைது செய்தனர்.

அவருக்கு தொடக்கத்தில் எந்தவொரு வழக்கறிஞரும் வாதாடா முன்வராத நிலையில், அவரது ஜாமின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்தது. பலமுறை அவரது ஜாமின் மனுக்கள் நிரா கரிக்கப்ப்டட நிலையில், உச்சநீதி மன்றத்தில் அறிவுறுத்தலின்படி, தற்போது  அவருக்கு உயர்நீதி மன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.

நிர்மலாதேவியின் ஜாமின் மனு மீதான விசாரணை மதுரை உயர்நீதி மன்ற கிளையில் நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, தமிழக அரசு  பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசு அளித்த பதில் மனுவில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளதாகவும் அரசு தரப்பில் எவ்வித தடையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர்  இது குறித்து சிபிசிஐடியின் பதில் தெரிவிக்கும்படி கூறி வழக்கை 12ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது, தனி நபர்களை சந்திக்க கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நிர்மலாதேவி நாளை சிறையில் இருந்து  விடுவிக்கப்படுவார் என தெரிகிறது. கடந்த 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்த நிர்மலாதேவி நாளை சிறையில் இருந்து வெளி வருகிறார்.