சென்னை; சென்னை கடற்கரை பகுதியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, பொதுமக்கள் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், 2ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொது மக்கள் கலந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. 75வது சுதந்திரன தினத்தையொட்டி வீடுகளில் 3 நாட்கள் தேசியகொடியை பறக்கவிட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் மாநில அரசுகளும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், வழக்கமாக சென்னை மெரினா கடற்கரையில், ஆகஸ்ட் 15ஆம் தேதியையொட்டி நடைபெற்று சுதந்திர தின கொண்டாடங்களில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம் என தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த ஆண்டு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மெரினாவில் நடைபெற உள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை நேரில் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . சுதந்திர தின விழாவிற்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் வயதானவர்கள் மற்றும் சிறுவர்களை அழைத்து வர வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் அனைத்து கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜாஜி சாலையில் போலீஸ் அணிவகுப்பு மற்றும் கோட்டை கொத்தளத்தில் இரண்டாவது ஆண்டாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.