டில்லி
இந்தியா 2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முதல் மீண்டும் சர்வதேச விமானச் சேவையைத் தொடங்கி உள்ளது.
கடந்த 2019 ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019-ம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இந்தியாவிலும் வேகமாகப் பரவத் தொடங்கியது, அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த 2020 மார்ச் 23-ம் தேதி முதல் சர்வதேச விமானங்கள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இடையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த பிறகு சில நாடுகளுக்கான விமானச் சேவை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
தற்போது கொரோனா பரவல் பெருமளவு குறைந்துள்ளதால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு, வழக்கமான சர்வதேச விமானச் சேவைஅயை நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது. இதையொட்டி 27 நாடுகளில் உள்ள 43 இடங்களுக்கு வாரத்துக்கு மொத்தம் 1,466 விமானப் புறப்பாடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை கால அட்டவணைப்படி, இந்தியாவில் இருந்து வாரத்துக்கு 3,200-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடுகள் இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது
அனைத்து சர்வதேச விமானங்களிலும் 100 சதவீத பயணிகள் அனுமதிக்கப்பட உள்ளனர். கொரோனா பரவல் குறைந்துள்ளதால் விமானப் பணிக் குழுவினர் கொரோனா தடுப்புக்கான சிறப்புக் கவச உடைகளை அணியத் தேவையில்லை என்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. மருத்துவ அவசரத் தேவைகளுக்காக 3 இருக்கைகளை காலியாக வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், முகக் கவசம் அணிந்து சானிடைசரால் கைகளை சுத்தம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.