துரை

மே 26 முதல் மதுரை மற்றும் தேனி இடையே 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் சேவை தொடக்குகிறது.

கேரளா பகுதியில் விளையும் ஏலக்காய் உள்ளிட்ட விளைபொருட்களின் வியாபார தேவைக்கென போடி – மதுரை இடையிலான ரயில் போக்குவரத்து கடந்த 1928-ம் ஆண்டு முதல் மீட்டர் கேஜ் பாதையில் ஓட தொடங்கியது. இது போடி, தேனி, ஆண்டிபட்டி மட்டுமின்றி மதுரை வரை வழியோர் ஊர்கள், உசிலம்பட்டி, கருமாத்தூர், செக்கானூரணி பகுதி மக்கள், மாணவர்கள், அரசு, தனியார் வேலைக்குச் செல்வோருக்கும் உதவியாக  இருந்தது.

இந்த ரயில் சேவை குறைந்த கட்டணத்தில் ஏலக்காய், பழங்கள், காய்கறிகள், இதர விவசாயப் பொருள்களை மதுரைக்குக் கொண்டு சென்று, அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயனுள்ளதாக இருந்தது.

நாடெங்கும் அனைத்து மீட்டர் கேஜ் பாதைகளும், அகல ரயில் பாதையாக மாற்றிய நிலையில் இறுதியாக 2010 டிசம்பரில் மதுரை – போடி இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் ரூ.450 கோடி மதிப்பிலான மதுரை – போடி அகல ரயில் பாதை திட்டத்தில் தேனி வரை அனைத்து பணிகளும் தற்போது முடிந்துள்ளன.

இந்த ரயில் சேவை தொடங்க இரு முறை அட்டவணை வெளியான நிலையிலும், சில நிர்வாக காரணமாக ரயில் இயக்கம் ஒத்தி வைக்கப்பட்டது.  மார்ச் 2022ல், ஆண்டிபட்டி – தேனி 17 கி.மீ., தூரத்தை மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்து 3 மாதத்திற்குள் மதுரை- தேனிக்கு ரயில் சேவை தொடங்கலாம் என அனுமதி அளித்தார்.

தற்போது மதுரை – தேனிக்கு முதல் கட்டமாக ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 26 அன்று  சென்னைக்கு வரும் பிரதமர் மோடி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் வைத்து மதுரை- தேனி ரயில் சேவை தொடங்கி வைக்கிறார் எனச் செய்தி வெளியாகி இருக்கிறது.

12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் கட்டமாக மதுரை – தேனி இடையே மே 26 முதல் ரயில் ஓடும் என்ற அறிவிப்பு தேனி, மதுரை மாவட்ட மக்கள், வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.