இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆல்ரவுண்டருமான ஷாகித் அப்ரிதி தனது அதிவிரைவு சதமடித்த பேட் பற்றிய ரகசியத்தை தற்போது கூறியுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் 476 சிக்சர்களுடன் கெயிலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அப்ரிதி. 1996 இல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்தவர்.
சுழற்பந்து வீச்சாலும், வேகமான ஆட்டத்தாலும், துறுதுறு என்ற இயல்பாலும் தனக்கென உலகளவில் ரசிகர்களைக் கொண்டவர்.
36 பந்துகளில் அதிவிரைவு சதமடித்த தனது பேட் பற்றி சமீபத்திய பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தார். அது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
” வக்கார் யூனிசிடம் சச்சின் டெண்டுல்கர் தனக்கு மிகவும் பிடித்த பேட் ஒன்றை கொடுத்தார். அதை வக்கார் தன் வீட்டிற்கு எடுத்து செல்வதற்கு முன்பு என்னிடம் தந்தார். அதில்தான் எனது அதிவிரைவு சதமடித்தேன்” என மனம் திறந்துள்ளார்.
1996 ஆம் ஆண்டு நைரோபியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 36 பந்துகளில் சதமடித்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் அப்ரிதி என்பது குறிப்பிடத்தக்கது.