லீப்ஜிக், ஜெர்மனி

ஜெர்மனியில் ஆப்கான் முன்னாள் அமைச்சர் சையத் அகமத் உணவு டெலிவரி செய்பவராகப் பணி புரிந்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்புத்துறை அமைச்சராக சையத் அகமத் பதவியில் இருந்தார். அவர் ஆப்கான் மக்களுக்கு பல சேவைகள் செய்துள்ளார்.  குறிப்பாக அவரது பதவிக் காலத்தில் அவர் கிராமப்புறங்களுக்குத் தொலைப்பேசி சேவையைக் கொண்டு வந்தவர் ஆவார்.  கடந்த ஆண்டு இவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தனது ராஜினாமாவுக்குப் பிறகு ஜெர்மனியில் உள்ள லீப்ஜிக் நகரில் குடியேறினார்.  தற்போது அவர் அங்கு உணவுப் பொருட்கள் டெலிவரி செய்யும் பணியைச் செய்து வருகிறார்.  இந்த செய்தி ஜெர்மன் செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளது.  தவிர அவர் சைக்கிளில்  உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் புகைப்படமும் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.,

சையத் அகமத் இது குறித்து, ”தற்போது நான் எளிமையாக வாழ்கிறேன். மேலும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். வேறு பல பணிகளுக்கு நான் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. உணவு டெலிவர் பணியில் கிடைக்கும் பணத்தைச் சேமித்து ஜெர்மன் கற்று வருகிறேன்.  எனது ஒரே இலக்கு ஜெர்மன் தொலைத்தொடர்புத் துறையில் பணிக்குச் சேர்வது ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.