டாக்கா: வங்கதேசம் – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்துவரும் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில், வங்கப் புலிகளை அவற்றின் சொந்தக் காட்டிலேயே விரட்டி விரட்டி மிரட்டி வருகிறது ஆஃப்கானிஸ்தான் அணி.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அது புத்திசாலித்தனமான முடிவுதான் என்பதை அந்த அணி பின்னர் நிரூபித்தது. அந்த அணியின் ரஹ்மத் ஷா சதம் அடிக்க, அஸ்கார் அஃப்கான் 92 ரன்கள் அடித்து வெறும் 8 ரன்களில் சதத்தை நழுவ விட்டார்.

அஃப்சார் சஸாய் 41 ரன்களும், கேப்டன் ரஷீத் கான் 51 ரன்களும் அடிக்க அந்த அணி மொத்தமாக 342 ரன்களை குவித்தது.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வங்கதேசம் தரப்பில் மொத்தம் 8 பவுலர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

அவர்களுள் தைஜுல் இஸ்லாம் மட்டும் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷாகிப் அல் ஹசன் மற்றும் நயீம் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் களமிறங்கிய வங்கதேச அணியில் மொமினுல் ஹாக் மட்டுமே 52 ரன்களை அடித்தார். லிட்டன் தாஸ் 33 ரன்கள் அடித்தார். தற்போது 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது அந்த அணி. இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

கேப்டன் ரஷீத் கான் 4 விக்கெட்டுகளும், முகமது நபி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.