சென்னை: குழந்தைகள் தினத்திலாவது மொபைல் ‍ஃபோன்களுக்கு குறைந்தபட்சம் 1 மணிநேரம் ஓய்வுகொடுத்துவிட்டு, உங்கள் குழந்தைகளிடம் நேரம் செலவிடுங்கள் என்று அறிவுரைக் கூறியுள்ளார் மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குநர்.

அவரின் இந்த அறிவுரையை, பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால், எத்தனைபேர் இதைப் பின்பற்றுகின்றனர் என்பதுதான் கேள்வியே!

நவீன யுகத்திற்குள் புகுந்து, டிஜிட்டல் சாதனங்களுடன் ஒன்றிவிட்ட பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் பேசி, அவர்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்கி முன்வருவதில்லை. இதனால் சிறுவயது குழந்தைகள்கூட மனஅழுத்த நெருக்கடிக்கு ஆளாகின்றனர் என்பது ஆய்வாளர்கள் கூற்று.

இதுகுறித்து யோசித்த பள்ளிக் கல்வித்துறை தன்சார்பாக ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படவுள்ள குழந்தைகள் தினத்தையொட்டி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 14ம் தேதி, இரவு 7.30 முதல் 8.30 வரை, பெற்றோர்கள் தங்களின் மொபைல் ஃபோன்களை அணைத்துவிட்டு, குழந்தைகளுடன் பேசி நேரத்தை செலவழிக்க வேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்து, ஒரு நல்ல தலைமுறையை உருவாக்க உதவும். இதையே ஒரு வழக்கமாக வாரம் மற்றும் மாதம் என பின்பற்றலாம்.

மேலும், இந்த நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை மேலும் அறிய www.gadgetfreehour.com என்ற இணையதளம் சென்று பார்வையிட்டு தகவல்களைப் பெறலாம் என்ன்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.