சென்னை

பா ஜ க வின் முதிய தலைவர் அத்வானி மேற்கத்திய நாகரீகத்தில் இருந்து மக்கள் முழுமையாக விடுபடவேண்டும் என கூறி உள்ளார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியின் பீளாட்டினம் ஜூபிளி விழா நேற்று நடை பெற்றது.  இந்த விழாவில் முன்னாள் துணை பிரதமர் அத்வானி, பா ஜ க மக்களவை உறுப்பினர் இல. கணேசன், அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன்,  திமுக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.  இந்த விழாவில் அத்வானி சிறப்புரை ஆற்றினார்.

அத்வானி தனது உரையில், “நாட்டு மக்கள் மேற்கத்திய நாகரீகத்தில் இருந்து முழுமையாக விடுபட்டால் மட்டுமே நமக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக ஆகும்.  நாம் இன்னும் மேற்கத்திய கல்வி முறை, கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றுக்கு அடிமையாக இருக்கிறோம்.   நமது கல்விமுறை நாட்டுக்கு உண்மையான தொண்டர்களை உருவாக்க வேண்டும்.

மனிதத்தன்மையே கல்விக்கு அணிகலன் ஆகும்.  ஒரு மனிதன் எத்தனை பட்டங்கள் பெற்றாலும், கர்வம் கொள்ளக் கூடாது.  கர்வம் மனிதனை படுகுழியில் தள்ளி விடும்.  கர்வமற்ற மனிதத்தன்மையே பெருமைக்குரியது.: எனக் கூறினார்.

கடந்த 1979ஆம் வருடம் அத்வானி மத்திய அமைச்சராக இருந்த போது இந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது.