சென்னை,
பால் மாதிரியை அந்தந்த நிறுவனங்களே பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த ஜூன் மாதம் சில தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாகவும், பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ரசாயணம் கலந்து விற்பனை செய்யப்படுகிறது, இதன் காரணமாக குழந்தைகளுக்கு அதிகம் பாதிப்பு ஏற்படுவதாகவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார்.
இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சரின் இந்த குற்றச்சாட்டை எதிர்த்து 3 தனியார் பால் நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,
ஆதாரம் இல்லாமல் தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் குறித்து கருத்து தெரிவிக்ககூடாது என தடை விதித்து. மேலும், டோட்லா, ஹட்சன், விஜய் உளளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை பால் தரத்தினை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மையத்தில் தான் இந்த சோதனைகள் நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.
அதில், பால் மாதிரியை அந்தந்த நிறுவனங்களே பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மேலும், எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனத்துக்கு எதிராகவும் தாம் கருத்து தெரிவிக்க வில்லை என்றும், எனவே இதன் மூல வழக்கு விசாரணைக்கு உகந்து அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேசுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.