ஆம்ஸ்டர்டாம்
கோரண்டன் விமான நிறுவனம் தங்கள் விமானங்களில் வயது வந்தோர் மட்டும் பகுதி அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
பொதுவாகச் சிலர் விமானங்களில் பயணம் செய்யும்போது குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே பயணிப்பார்கள். வேறு சிலர் தங்களின் குழந்தைகளுடன் விளையாடுவார்கள். அவ்வப்போது குழந்தைகள் அழுகை சத்தமும் கேட்கும். அமைதியாக பயணிக்க விரும்புவோருக்கு இத்தகைய சூழல் இடையூறாக இருக்கும்.
இது தொடர்பாக சில சமயங்களில் வாக்குவாதமும் ஏற்படுகிறது. ஆகவே, குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக பயணிக்கும் நபர்களுக்கு, குழந்தைகளின் சத்தம் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க விமானங்களில் “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்ற பகுதியை கோரண்டன் விமானச்சேவை விமான நிறுவனம் வழங்கத் திட்டமிட்டுள்ளது.
கோரண்டன் விமானச்சேவை குழந்தைகளின் சத்தம் இல்லாத சூழலை விரும்பும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பயணிகளுக்கு தனியாக இருக்கைகளை ஒதுக்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது இந்தத் திட்டத்தின் கீழ், ஏர்பஸ் ஏ350 விமானங்களில் சில இருக்கைகள் வயது வந்தோருக்காக ஒதுக்கப்படும்.
நவம்பர் மாதத்திலிருந்து ஆம்ஸ்டர்டாம் மற்றும் டச்சு கரீபியன் தீவான குராக்கோ இடையே இயக்கப்படும் விமானத்தில் இந்த வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த பகுதி குழந்தைகள் இல்லாமல் பயணிக்கும் பயணிகளுக்காகவும், அமைதியான சூழலில் தங்கள் பணிகளை கவனிக்க விரும்பும் பயணிகளுக்காகவும் ஒதுக்கப்படுவதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.
இந்த இருக்கைகள் விமானத்தின் முன் பகுதியில் ஒதுக்கப்பட உள்ளன. இப்பகுதியில். 94 சாதாரண இருக்கைகள் மற்றும் 9 பெரிய வசதியான இருக்கைகள் இருக்கும். மற்ற இருக்கைகள் உள்ள பகுதிக்கும் இந்த பகுதிக்கும், இடையே சுவர்கள் மற்றும் திரைச்சீலைகள் அமைக்கப்படும்.
இவ்வாறு அடல்ட் ஒன்லி இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக 45 யூரோக்கள் (ரூ.4,050) செலுத்த வேண்டும். பெரிய இருக்கைகளுக்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக 100 யூரோக்கள் (ரூ.8,926) செலுத்த வேண்டும் என விமான நிறுவனம் கூறியுள்ளது.