ஏடிஎஸ்பி பாண்டியராஜன்,  பெண்ணை அடிக்கவே இல்லை!: சட்டசபையில் பொய் சொன்ன அமைச்சர்!

சென்னை:

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடையை மூட கோரி போராட்டம் நடத்திய பெண்களை, ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன் அடிக்கவே இல்லை என்று சட்டசபையில் அமைச்சர்  தங்கமணி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சாலைமறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.  அவர்கள் மீது ஏ.டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். பாண்டியராஜனும் பெண்களை கடுமையாக தாக்கினார். அவர் ஒரு பெண்மணியை கண்ணத்தில் அறையும் ஒளிப்படம் சமூகவலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. பாண்டியராஜனின் தாக்குதலில் ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு காது கேட்கும் திறன் பறிபோனது.

பாண்டியராஜன் மற்றும் அவர் தலைமையிலான காவல்துறையினரின் தாக்குதல் குறித்து மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியது.

தங்கமணி

ஆனால் தமிழக அரசோ பாண்டியராஜனுக்கு ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளித்தது.

இந்த நிலையில்  எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பெண்ணை அடித்த போலீஸ் அதிகாரி பாண்டியராஜனுக்கு  எப்படி பதவி உயர்வு கொடுக்கலாம் என்று சட்டசபையில் கேள்வி எழுப்பியதோடு,  இது கண்டிக்கத்தக்க செயல் என்றும் தெரிவித்தார்

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, “சாமளாபுரத்தில் பெண்களை ஏடிஎஸ்பி பாண்டியராஜன் அடிக்கவேயில்லை” என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்தார்.

போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்மணியை பாண்டியராஜன் அறையும் காட்சி, சமூகவலைதளங்களில் பரவிய நிலையில் சட்டசபையிலேயே அமைச்சர் பொய்யான தகவலை தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


English Summary
adsp pandiarajan-did-not-attack-woman-protest-says-minister-assembly-